தேனியில் வாட்டி வதைக்கும் கோடை வெயில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவு

தேனியில் கோடை வெயில் தற்போதே வாட்டி வதைக்க தொடங்கியதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
தேனியில் வாட்டி வதைக்கும் கோடை வெயில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவு
Published on

தேனி,

தேனியில் இந்த ஆண்டு கோடை வெயில் தொடக்கமே கொடூரமாகி உள்ளது. சில நாட்களாக தேனி நகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் சாரல் மழை பெய்தது. அன்றைய நாளில் வெப்பத்தை அந்த மழை தணித்த போதிலும் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று காலையில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. பிற்பகலில் தேனி நகரில் சுமார் 98.6 டிகிரி வெயில் அடித்தது. இதனால், சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் வாடி வதங்கினர். தேனி நகரில் சாலையோரம் நடந்து சென்ற மக்கள் பலரும் வெயிலுக்கு குடை பிடித்தபடியும், தலையில் முக்காடு போட்டபடியும் சென்றதை பார்க்க முடிந்தது.

கோடை வெயில் உடலில் உள்ள நீர்ச்சத்தை குறையச் செய்து விடுவதால், தாகம் தணிக்கவும், வெப்பத்தை தணிக்கவும் குளிர்பானம் விற்பனை கடைகள், பழச்சாறு விற்பனை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சாலையோரம் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு, மோர், தர்பூசணி பழங்கள், கம்பங்கூழ் விற்பனை செய்யும் இடங்களிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக நின்று அவற்றை வாங்கி சாப்பிட்டனர்.

நண்பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. சாலைகளும் அனல் கக்கியது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பரிதவிப்பு ஏற்பட்டது. தொடக்கத்திலேயே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், கோடை காலத்தை எதிர்கொள்வது குறித்து மக்களிடம் தற்போதே அச்சம் ஏற்படத் தொடங்கி விட்டது. அவ்வப்போது கோடை மழை பெய்தால் மட்டுமே கோடை காலத்தை சமாளிக்க முடியும் என்ற நிலைமை உருவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com