தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Published on

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு அரசு பஸ் ஒன்று நாசரேத் நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை தூத்துக்குடி கணேசபுரத்தைச் சேர்ந்த டிரைவர் மணி (வயது 52) ஓட்டி சென்றார். தூத்துக்குடி கோமதிபாய் காலனியை சேர்ந்த முத்து என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டை கடந்து பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தில் பஸ் கண்டக்டர் முத்துவுக்கு கழுத்தில் காயமும், டிரைவர் மணிக்கு கை, காலில் லேசான காயமும் ஏற்பட்டது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து பஸ் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு திருப்பி கொண்டு வரப்பட்டது. அங்கு இருந்து மாற்று பஸ் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். காயம் அடைந்த டிரைவர், கண்டக்டர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர், அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதேபோன்று கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு நேற்று காலையில் அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அருப்புகோட்டை பெரியநாயகபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (40) பஸ்சை ஓட்டிச் சென்றார். எட்டயபுரம் அருகே தெற்கு முத்தலாபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி (42) பஸ்சில் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர்.

ஆறுமுகநேரியை அடுத்த சாகுபுரம் பஸ் நிறுத்தத்தை கடந்து, பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது. பின்னர் மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

பஸ்சின் கண்ணாடி சிதறல்கள் தெறிந்து விழுந்ததில் டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் பிச்சைமணி ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். உடனே அவர்கள் 2 பேரும் ஆறுமுகநேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து, பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com