காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை
Published on

பென்னாகரம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கனமழை

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதனிடையே கடந்த 2 நாட்களாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல், பிலிகுண்டுலு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

ஆர்ப்பரித்து கொட்டியது

இந்தநிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது. இந்த நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரித்து மாலை 4 மணி நிலவரப்படி 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மறுஉத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com