மஸ்கட்டில் இந்திய ஓவிய கண்காட்சி : மத்திய மந்திரி முரளீதரன் திறந்து வைத்தார்

மஸ்கட்டில், இந்திய ஓவிய கண்காட்சியை மத்திய மந்திரி முரளீதரன் திறந்து வைத்தார்.
மஸ்கட்டில் இந்திய ஓவிய கண்காட்சி : மத்திய மந்திரி முரளீதரன் திறந்து வைத்தார்
Published on

மஸ்கட்:

ஓமன் நாட்டில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் ஓமன் மந்திரிகள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசி வருகிறார்.

அவ்வகையில் மஸ்கட்டில் "நவீன இந்திய ஓவியத்தின் தலைசிறந்த படைப்புகள்" என்ற தலைப்பிலான ஓவிய கண்காட்சியை மந்திரி முரளீதரன் திறந்து வைத்தார். இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை நினைவு கூரும் வகையில் மஸ்கட் தேசிய அருங்காட்சியகம், இந்திய தூதரகம் மற்றும் டெல்லி தேசிய ஓவிய கண்காட்சி மையம் ஆகியவை இணைந்து இந்த ஓவிய கண்காட்சியை நடத்துகின்றன.

விழாவில் மந்திரி முரளீதரன் பேசும்போது, ''இந்த கண்காட்சியில் இந்தியாவின் சிறந்த ஓவியர்களின் ஓவியங்களான ராஜா ரவி வர்மா, நந்தலால் போஸ், ஜமினி ராய், அம்ரிதா செர் கில் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களின் படங்கள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய கிழக்கு பகுதியில் முதன் முறையாக இது நடப்பது மிகவும் சிறப்புக்குரியது. இது இரு நாடுகளுக்கும் இடையில் கலாசார ரீதியான பிணைப்பை ஏற்படுத்துவதில் முக்கியமான பங்கினை வகிக்கும். இதில் பங்கேற்றுள்ள கலைஞர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்'' என்றார். பின்னர் அவர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்களை பார்வையிட்டார்.

அப்போது இந்திய தூதர் அமித் நாரங், டெல்லி தேசிய ஓவிய கண்காட்சி மையத்தின் இயக்குனர் தெம்சுனரோ திரிபாதி, மஸ்கட் தேசிய அருங்காட்சியக மைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இந்த கண்காட்சி அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com