இந்தியாவின் 'குளுகுளு' மலைவாழிடங்கள்!

கோடை வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் இந்தியாவின் குளுகுளு மலை வாழிடங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
இந்தியாவின் 'குளுகுளு' மலைவாழிடங்கள்!
Published on

1. சிம்லா

இமாசல பிரதேச மாநிலத்தின் தலைநகர். கடல் மட்டத்தில் இருந்து 2,213 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த நகரம் பிரிட்டீஷ் ஆட்சியின்போது அவர்களின் கோடை கால தலைநகராக இருந்தது. சிம்லாவை சுற்றி ஜாக்கு மலை ஸ்கேட்டிங் ரிங், அன்னாடேல், சாட்விக் நீர்வீழ்ச்சி என்று பல்வேறு பகுதிகள் உள்ளன. இதில் ராஷ்டிரபதி நிவாஸ், அரசு அருங்காட்சி யகம் ஆகியவை முக்கிய மானவை. மலை ரெயில், குதிரையேற்றம், காட்டு பாதைகளில் நடப்பது சுகமான அனுபவம். கோடையில் குளுகுளு தேசமாக வும், குளிர் காலத்தில் உறைபனி தேசமாகவும் சிம்லா மாறிவிடும். இங்கு எந்த பருவத்திலும் செல்லலாம். இதனால் தான் ஆங்கிலேயர்கள் சிம்லாவை 'குன்றுகளின் ராணி' என்று அழைத்தனர்.

2. டார்ஜிலிங்

மேற்கு வங்காள மாநிலத்தில் டார்ஜிலிங் உள்ளது. இங்க 2,134 மீட்டர் உயரத்தில் புத்த மடாலயங்களை தரிசிக்கலாம். தேயிலை தோட்டங்களில் காலற நடக்கலாம். டார்ஜிலிங்-ரஞ்சித் சமவெளி கயிற்று பாதை, செஞ்சால் ஏரி, கோளரங்க மலை, இயற்றை வரலாற்று அருங்காட்சியகம், இமாலய உயிரியல் பூங்கா, திர்தாம் கோவில் ஆகியவை முக்கிய இடங்கள். இங்கிருந்து கஞ்சன்ஜங்கா மற்றும் எவரெஸ்ட் சிகரங்களை பார்க்கலாம்.

3. மூணார்

மூணார், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். முத்திரபுழா, சண்டுவரை, குண்டலா என்ற 3 ஆறுகள் சந்திக்கும் இடம் மூணாறு என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆனைமுடி, தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம். இரவிக்குளம் தேசிய பூங்கா, படகு பயணம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கண்களை கவரும் வகையில் கார்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் இங்கு அதிகம்.

4. குடகு

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு இந்தியாவின் ஸ்காட்லாந்து எனவும், தென்னிந்தியாவின் காஷ்மீர் எனவும் அழைக்கப்படுகிறது. காவிரி நதி குடகில் உற்பத்தியாகிறது. குடகு மேற்கு கரை ஓரமுள்ள அழகான மலை பிரதேசம். இது சுமார் 6,200 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மடிகேரி முக்கிய நகரமாகும். குடகை ஆங்கிலத்தில் 'கூர்க்' என்று அழைப்பார்கள்.

5. லே

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் உள்ளது லே. இது கடல் மட்டத்தில் இருந்து 3,524 மீட்டர் (11,562 அடி) உயரத்தில் உள்ளது. லடாஜி மன்னர்களின் ஒன்பது அடுக்கு அரண்மனையும் புத்த கோவிலும் குறிப்பிடத்தக்கவை. நம்கியான் மலையில் அமைந்த விக்டரி கோட்டை, சங்க்ஸ் பியா கிராமம், லடாக் சுற்றுச்சூழல் மையம், மராவியன் சர்ச் பிற முக்கிய இடங்களாகும்.

6. ஊட்டி

ஆங்கிலேயரால் 1821-ல் உருவாக்கப்பட்ட உதகமண்டலம் 2,240 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்தியா சுதந்திரம் பெறும் வரை மதராஸ் மாகாணத்தின் அதிகாரப்பூர்வ கோடைகால தலைமையமாக விளங்கியது. இங்குள்ள தாவரவியல் பூங்கா அரிய தாவரங்களை கொண்டது. இங்குள்ள ரோஜா தோட்டத்தில் 1,900 வகை பூச்சி உள்ளன. செயற்கை ஏரியில் படகு பயணம் செல்லலாம். இது 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது.

7. கொடைக்கானல்

1845-ல் பிரிட்டிஷ்காரரால் நிறுவப்பட்ட ஊர். 30 ஹெக்டேர் பரப்பில் உள்ள செயற்கை ஏரி ஊருக்கு சிறப்பு சேர்க்கிறது. கொடைக்கானல் வானாய்வு கூடம் வரலாற்று சிறப்பு கொண்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com