

தர்மபுரி:-
தர்மபுரி நகராட்சியில் பல்வேறு குழுக்களுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மறைமுக தேர்தல்
தர்மபுரி நகராட்சி 33 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த லட்சுமி நாட்டன் மாது நகராட்சி தலைவராகவும், நித்யா அன்பழகன் துணைத்தலைவராகவும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் தர்மபுரி நகராட்சி வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் 4 பேர், ஒரு நகராட்சி நியமன குழு உறுப்பினர் மற்றும் ஒரு நகராட்சி ஒப்பந்த குழு உறுப்பினர் ஆகிய 6 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் தர்மபுரி நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 28-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சம்பந்தம், 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சமயா ராஜா, 21-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சந்திரா நாகராஜன், 31- வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் மாதேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஒப்பந்த குழு
இதேபோன்று நகராட்சி நியமன குழுவுக்கு 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செல்வி சுருளிராஜன், நகராட்சி ஒப்பந்த குழுவிற்கு 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் மோகன் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நகராட்சி பல்வேறு குழுக்களுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 6 கவுன்சிலர்களும் நகராட்சித் தலைவர் லட்சுமி நாட்டான் மாது, துணைத்தலைவர் நித்யா அன்பழகன், ஆணையாளர் சித்ரா சுகுமார் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர். இதைத்தொடர்ந்து குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மற்ற கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.