சரத் பவாரின் சுயசரிதை புத்தகத்தில் உத்தவ் தாக்கரே குறித்த தகவல்கள் தவறானது- சஞ்சய் ராவத் சொல்கிறார்

சரத்பவாரின் சுயசரிதை புத்தகத்தில் உத்தவ் தாக்கரே தொடர்பான தகவல்கள் தவறானவை என சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
சரத் பவாரின் சுயசரிதை புத்தகத்தில் உத்தவ் தாக்கரே குறித்த தகவல்கள் தவறானது- சஞ்சய் ராவத் சொல்கிறார்
Published on

மும்பை, 

சரத்பவாரின் சுயசரிதை புத்தகத்தில் உத்தவ் தாக்கரே தொடர்பான தகவல்கள் தவறானவை என சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.

தவறான தகவல்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் தனது சுயசரிதை புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிவை சமீபத்தில் வெளியிட்டார்.

இதில் மகா விகாஸ் அகாடி ஆட்சியின்போது முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரேவை விமர்சித்து இருந்தார். அவர் தனது புத்தகத்தில், "கொரோனா சமயத்தில் முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே பேஸ்புக் மூலம் பேசியது ஒரு தரப்பு மக்களுக்கு சரியாக இருந்தது. இருப்பினும் அவர் மாநில தலைமை செயலகமான மந்திராலயத்திற்கு 2 முறை மட்டுமே சென்றார்" என குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் உத்தவ் தாக்கரே பற்றி சரத்பவாரின் சுயசரிதை புத்தகத்தில் கூறப்பட்டு இருக்கும் தகவல்கள் தவறானது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

தலைமை செயலகத்திற்கு உத்தவ் தாக்கரே 2 முறை மட்டுமே சென்றார் என்பது தவறான தகவலாகும். உத்தவ் தாக்கரே வழக்கம்போல அலுவலகத்திற்கு சென்றுகொண்டு இருந்தார். ஆனால் கொரோனா தொற்று காலத்தில் அவரது மந்திராலயா வருகை குறைக்கப்பட்டன. காரணம் வீட்டில் இருந்து வேலை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருந்ததால், பிரதமர், மத்திய மந்திரி மற்றும் பிற முதல்-மந்திரிகளும் கொரோனா காலத்தில் அலுவலகத்திற்கு செல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தவ் தாக்கரே பதிலளிப்பார்

அதுமட்டும் இன்றி சரத்பவார் தனது சுயசரிதை புத்தகத்தில், " உத்தவ் தாக்கரே தனது சொந்த கட்சியில் நிலவிய அதிருப்தியை கணிக்க தவறினார். அதனால் அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. ஒரு முதல்-மந்திரிக்கு அரசியல் புத்திசாலித்தனம் தேவை, அரசியல் நடப்புகளை பற்றி அவர் நன்கு அறிந்திருக்க வேண்டும். இது அவரிடம் குறைவாக இருந்ததாக நாங்கள் அனைவரும் கருதுகிறோம்" என்று தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து பேசிய சஞ்சய் ராவத் எம்.பி., "நான் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. நான் அதை படிப்பேன். மக்கள் 2 நாட்களுக்கு ஒரு புத்தகத்தை படிப்பார்கள். பின்னர் அது நூலகத்திற்கு சென்றுவிடும். இதுவும் போகட்டும். உத்தவ் பாலாசாகேப் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விரைவில் பேட்டி அளிக்க உள்ளார். அவரை பற்றி எழுதப்பட்ட தகவல்களுக்கு அவர் பதில் அளிப்பார்" என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com