உலக நட்பு தினம்

1935-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமையை உலக நட்பு தினமாக அறிவித்தது.
உலக நட்பு தினம்
Published on

"நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை"

சாதி, மதம், பேதங்களை கடந்தது நட்பு என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். நண்பர்களுடன் இருக்கும் ஒவ்வொரு தினமும் நண்பர்கள் தினம் தான். இருப்பினும் முதன் முதலில் "யுனடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ்" 1935-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமையை உலக நட்பு தினமாக அறிவித்தது.

நட்பு என்பது அறியாத வயதில் தொடங்கி பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் வெளி உலகம் முதல் தற்போது சமூக வலைதளங்கள் வரை வளர்ந்து வருகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி நட்பு அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவங்களை தந்திருக்கும். வெகுநாட்கள் கழித்து நண்பனையோ, தோழியையோ சந்திக்க போகிறோம் என்றால் அதைவிட மகிழ்ச்சி ஏதுமில்லை. அறியாத வயதில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகள் விலை மதிப்பற்றது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் இது போன்ற விளையாட்டுகள் மறைந்து விட்டன.

"ஆபத்தில் உதவுபவனே உற்ற நண்பன்". இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டரில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் துன்பத்தில் துணை நிற்க உண்மையாக ஒரு நண்பனாவது இருக்க வேண்டும்.நம் வீட்டில் எத்தனை உறவுகள் இருந்தாலும் நம்முடைய சில பிரச்சினைகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள தயங்குகிறோம். ஆனால் நம் நண்பர்களிடம் அவற்றை எந்த தயக்கமுமின்றி கூறுகிறோம். எத்தகைய சோகமும் நண்பர்களை பார்த்ததும் மறந்து விடும். நாம் நன்றாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவதும் நட்புதான். கஷ்டத்தில் இருக்கும்போது ஓடி வந்து உதவி செய்வதும் நட்புதான்.

'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேதான் இடுக்கண் களைவதாம் நட்பு' என்றார் திருவள்ளுவர். உடலில் அணிந்திருக்கும் ஆடை அவிழ்ந்து விழும்போது நம்முடைய கை உடனே அதை பற்றிக்கொள்ளும். அதுபோல் நம்முடைய நண்பர்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் முடிந்த உதவியை ஏதாவது ஒரு வகையில் உடனே செய்யவேண்டும்.

அதேபோல் நமக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதற்காக அருகே நின்று ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லும் ஒற்றை நண்பனையாவது சம்பாதித்து வைத்திருக்கவேண்டும்.

பணத்தை தேடி ஓடிக்கொண்டே இருக்கும் இந்த சூழலில் நண்பர்களை வாரம் ஒரு முறையாவது நேரில் சந்தித்து மகிழவேண்டும். அதுவே நட்புக்கு கொடுக்கும் மரியாதை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com