இப்படிக்கு தேவதை

அவரது வளர்ச்சிக்கு ஆதரவும், ஊக்கமும் அளியுங்கள். மாற்றம் இல்லாமல் வாழ்வில் வளர்ச்சி இல்லை. நிச்சயமற்ற தன்மையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நேர்மறையாக சிந்தித்து, மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தயாராகுங்கள்.
இப்படிக்கு தேவதை
Published on

1. ன்னுடைய கணவருக்கு 35 வயது ஆகிறது. அவர் கடந்த 10 வருடங்களாக, நாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பள உயர்வு பெரிதாக இல்லையென்றாலும் மன அழுத்தம் இல்லாத வேலை, வீட்டுக்கு அருகிலேயே பணியிடம் இருப்பது போன்ற காரணங்களால் அவர் இதுவரை வேறு வேலைக்கு முயற்சிக்கவில்லை. சமீபகாலமாக வேறு நிறுவனத்திற்கு மாறப்போவதாக கூறி வருகிறார். ஒருவேளை அந்த பணி அவருக்கு ஏற்புடையதாக இல்லையெனில், வேறு வேலைக்கு என்ன செய்வது? என்ற கேள்வி என்னை குழப்புகிறது. இந்த நிலையில் நான் என்ன செய்வது?

உங்கள் கணவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றால், அவர் அதைப் பற்றி நன்றாக யோசித்துதான் எடுத்திருக்கக்கூடும். தற்போது பார்த்துக்கொண்டு இருக்கும் பணியை விட சிறந்த வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருக்கலாம். கணவரின் பணி மாறுதல் தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை கடந்து வாருங்கள். அவரது நேரம், பணிச்சுமை போன்றவற்றின் அடிப்படையில், இது அவருக்கு மட்டுமில்லாமல் உங்களுக்கும் ஒரு சிறந்த மாற்றமாக இருக்கக்கூடும். அவருக்கு தற்போது 35 வயது மட்டுமே ஆகிறது. இன்னும் குறைந்தது 20 ஆண்டுகள் அவர் பணியாற்ற வேண்டியது இருக்கும். அவரது வளர்ச்சிக்கு ஆதரவும், ஊக்கமும் அளியுங்கள். மாற்றம் இல்லாமல் வாழ்வில் வளர்ச்சி இல்லை. நிச்சயமற்ற தன்மையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நேர்மறையாக சிந்தித்து, மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தயாராகுங்கள்.

2. என்னுடைய ஒரே மகள் 20 வயதில் காதல் திருமணம் செய்து கொண்டாள். திருமணமாகி 5 வருடத்தில் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் கடந்த 2 வருடங்களாக எங்கள் வீட்டில் வசிக்கிறாள். அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாள். சமீபகாலமாக எப்போதும் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்கிறாள். குழந்தைகளை சரியாக கவனிப்பது இல்லை. இது குறித்து அவளிடம் மறைமுகமாக கேட்டாலும் எந்த பதிலும் இல்லை. அவளது எதிர்காலத்தை நினைத்து கவலையாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்.

நீங்கள் கூறியதில் இருந்து உங்கள் மகளுக்கு 27 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அவருக்கு புதிதாக ஒரு வாழ்க்கையை தொடங்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை அவர் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பாமல் இருக்கலாம். இதைப் பற்றி பேசுவதற்கு முன்பு சில விஷயங்களை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் மகளுடைய தற்போதைய வாழ்க்கையின் நிலை என்ன? அவர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றவரா? இல்லை என்றால் ஏன் பெறவில்லை? தற்போதைய உறவை சரிசெய்ய முடியுமா? ஆம், எனில் நீங்களும் அவரும் எடுத்த நடவடிக்கைகள் என்ன? முதலில் அவரிடம் இதைப் பற்றியெல்லாம் பேசுங்கள். அவர் இதைப் பற்றி ஒரு குடும்பநல ஆலோசனை நிபுணரிடம் பேச வேண்டும் என்றால், அவருக்கு உதவுங்கள். முந்தைய திருமண பந்தத்தில் இழந்த அனைத்தையும் ஈடுசெய்ய அவர் ஒருவரிடம் ஈர்க்கப்படுகிறார் என்பது தெரிகிறது. அதை உணர்ந்து அவரை சரியான முறையில் வழிநடத்துங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com