இப்படிக்கு தேவதை

ஒவ்வொருவரும் தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வதற்கு, போதுமான கால அவகாசம் தேவைப்படும். உங்களுடைய வாழ்க்கையில் அத்தகைய திருப்புமுனை வரும்வரை காத்திருங்கள்.
இப்படிக்கு தேவதை
Published on

1. னக்கு 70 வயது ஆகிறது. 10 வருடங்களுக்கு முன்பு வரை எனது மகனின் குடும்பத்தோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். பின்பு சில கருத்து வேறுபாடு காரணமாக நானும், என்னுடைய கணவரும் தனியாக வசித்து வந்தோம். 3 வருடங்களுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு நான் தனியாக வசித்து வருகிறேன். இப்போது பணியின் நிமித்தமாக வெளியூருக்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டு இருக்கும் எனது மகன், என்னை தங்களுடன் வந்து வசிக்குமாறு அழைக்கிறான். மருமகளுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நான் அவர்களுடன் வசிப்பதற்கு அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் எனக்கு, நான் பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டு போக விருப்பம் இல்லை. இந்த நிலையில் நான் என்ன செய்வது?

உங்களுடைய மகன் உங்களை, தங்களுடன் சேர்ந்து வசிக்குமாறு அழைக்கிறார். மருமகள் அவரது முடிவுக்கு ஆதரவாக இருக்கிறார். இந்த நிலையில், நீங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான சாதகமான சூழ்நிலைதான் இருக்கிறது. நீங்கள் உங்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டீர்கள். உங்கள் மகன் அவருக்கான வாழ்க்கையை வாழ்வதற்கு தயாராகிக்கொண்டு இருக்கிறார். அதில் நீங்களும் ஒரு பகுதியாக அவரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவரது முடிவு, உங்கள் அனைவருக்குமே இனிமையான நினைவுகளை உருவாக்க உதவும். ஒருவேளை நீங்கள் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வசிக்கும்போது உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால், அது அவரை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்திவிடும். ஒன்றாக வசிப்பது இவை அனைத்தையுமே தவிர்க்க உதவும். நீங்கள் உங்களுடைய பிறந்த மண்ணில் வாழ்வது, உங்கள் மகனின் மனநிறைவைக் காட்டிலும் முக்கியமானதா? என்பதை யோசித்து முடிவு எடுங்கள்.

2. பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டேன். கணவருடன் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறேன். எத்தனையோ முறை பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு உறவை புதுப்பிக்க முயற்சித்தேன். ஆனால் உறவினர்களின் பேச்சைக்கேட்டு அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு ஆண் குழந்தை பிறந்த தகவல் அறிந்தும் என் பெற்றோர் வந்து பார்க்கவில்லை. மனதளவில் காயப்பட்ட நான் அதன்பிறகு அவர்களை அணுகவில்லை. இப்படியே 3 வருடங்கள் ஓடிவிட்டது. என் பெற்றோரை நினைத்து கவலையாக இருக்கிறது. என்னுடைய தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நான் என்ன செய்வது?

உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் உறுதியோடு ஒரு முடிவு எடுத்திருக்கிறீர்கள். அதை உங்கள் பெற்றோரும் உடனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அவர்களின் கண்ணோட்டம் வேறுமாதிரியாக இருக்கும். உங்களுக்குள் இடைவெளி உருவாகி 3 வருடங்கள் தான் ஆகிறது. ஒவ்வொருவரும் தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வதற்கு, போதுமான கால அவகாசம் தேவைப்படும். உங்களுடைய வாழ்க்கையில் அத்தகைய திருப்புமுனை வரும்வரை காத்திருங்கள். உங்கள் சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை என்பதற்காக, நீங்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டியதில்லை. உங்கள் கணவர் மற்றும் குழந்தை மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பாருங்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பெற்றோர் உங்களை ஆதரிப்பார்கள். அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி', தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007. மின்னஞ்சல்: devathai@dt.co.in

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com