கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
Published on

112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா

கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி விழாவையொட்டி பிரமாண்டமான சிலை பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைக்கப்பட்டுள்ள சிலை திறப்பு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த விழாவில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கவும், சிவராத்திரி விழாவை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் மாலை 5.30 மணிக்கு கோவை வந்தார். கோவை விமானநிலையத்தில் முதல்-மந்திரி எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து பிரதமரை வரவேற்றனர்.

அதன்பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப் பட்டார்.

மோடியுடன், கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் ஒரே ஹெலிகாப்டரில் சென்றனர். மாலை 6.05 மணிக்கு ஈஷா யோகா மையத்துக்கு ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. பிரதமர் மோடியை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். பின்னர் கார் மூலம் பிரதமர் மோடி விழா நடைபெறும் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார்

தியான லிங்கத்தை வணங்கினார்

ஈஷாயோகா மையத்தில் உள்ள புனித சூரிய குண்டத்தை பார்வையிடுவதற்காக படிக்கட்டு வழியாக பிரதமர் மோடி நடந்து வந்தார். தியான லிங்க பகுதிகளையும், நந்தி சிலையையும் பக்தி பரவசத்துடன் பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற பஞ்சபூத ஆராதனை நிகழ்ச்சியில் பிரதமர் தீப தட்டு ஏந்தி வந் தார். பின்னர் தியான லிங்கத்தை மலர்களை தூவி வணங்கினார். வேத மந்திரங்கள் ஓத ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தியான லிங்கத்தை சத்குரு ஜக்கிவாசுதேவுடன் சேர்ந்து மோடி சுற்றி வந்தார். அங்கு சிறிது நேரம் உட்கார்ந்து மோடி தியானம் செய்தார்.

தியான லிங்க பகுதிக்குள் அக்னி சட்டிகளை ஏந்தி, கலைஞர்கள் நடனம் ஆடினார்கள். இதனை மோடி ஆர்வத்துடன் இருக்கையில் அமர்ந்து பார்வையிட்டார். பின்னர் மாலை 6.50 மணியளவில் லிங்க பைரவி தேவியை தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பிரதமர் கலந்துகொண்டார். அங்கிருந்து கார் மூலம் ஆதியோகி சிலை அமைந்துள்ள மேடைபகுதிக்கு பிரதமர் அழைத்து வரப்பட்டார்.

சிலை திறப்பு

சிவன் சிலைக்கு புனித நீரை ஊற்றினார். அதன்பின்னர் இரவு 7.10 மணியளவில் 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது கலைஞர்கள் முரசு அடித்து இசைத்தனர். சிவராத்திரிக்கான மகாயோக யக்னா தீப்பந்தத்தை ஜக்கி வாசுதேவ், பிரதமரிடம் கொடுத்தார். கொப்பரையில் மகா தீபத்தை பிரதமர் ஏற்றி வைத்தார். திறப்பு விழாவின்போது ஜக்கிவாசுதேவ் உடுக்கை அடித்தார். அப்போது மோடியும் ஆர்வத்துடன் உடுக்கையை வாங்கி சிறிதுநேரம் அடித்தார். பிரதமருக்கு ஜக்கிவாசுதேவ் கயிறு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஆதியோகி சிலை திறப்பையொட்டி ஆதியோகி தொடர்பான புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார். ஆதியோகி தொடர்பான பாடலை பாடல்களும் பாடப்பட்டன. நிகழ்ச்சியையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com