தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு; வேலைக்கார பெண் உள்பட 4 பேர் கைது

தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு வழக்கில் வேலைக்கார பெண் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு; வேலைக்கார பெண் உள்பட 4 பேர் கைது
Published on

சென்னை கொரட்டூரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு 39-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). தொழில் அதிபரான இவர், அம்பத்தூரில் சொந்தமாக கம்பெனி நடத்தி வருகிறார். தனது வீட்டின் ரகசிய அறையில் வைத்திருந்த 40 பவுன் நகை திருடு போனதாக கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். சந்திரசேகர் வீட்டில் வேலை செய்து வந்த சத்யா (30) என்ற பெண் மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை சென்று கண்காணித்தனர்.

அப்போது திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் தப்பி செல்ல முயன்ற சத்யா மற்றும் அவருடைய தங்கை லட்சுமி (28), திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் (27), பிரகாஷ் (26) ஆகிய 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் சத்யா, தான் வேலை பார்த்து வந்த சந்திரசேகர் வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 40 பவுன் நகையை திருடி தனது தங்கை லட்சுமி உள்பட இவர்கள் 3 பேரிடமும் கொடுத்து வைத்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 27 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் திருடிய பணத்தில் வாங்கிய புதிய மோட்டார் சைக்கிளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com