

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம், ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் மகேஷ் நாராயணன் இயக்க உள்ள மலையாள படத்துக்கும் அவர் திரைக்கதை அமைக்க உள்ளார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக பா.இரஞ்சித் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து முடிந்த பின் அவர் பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியுடன் கபாலி, காலா என இரண்டு படங்களில் பணியாற்றிய பா.இரஞ்சித், கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.