தீர்த்தஹள்ளியில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.11 லட்சம் மோசடி


தீர்த்தஹள்ளியில்  பெண்ணிடம் நூதன முறையில் ரூ.11 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 6:45 PM GMT)

தீர்த்தஹள்ளியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.

சிவமொக்கா-

தீர்த்தஹள்ளியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் விளம்பரம்

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி டவுன் பகுதியில் 30 வயது பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவர் செல்போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது அதில் பகுதி நேர வேலை உள்ளது என்ற விளம்பரம் இருந்துள்ளது. அதனை பார்த்த அந்த பெண் அதில் கூறப்பட்டு இருந்த தகவல் அனைத்தையும் தெரிவித்தார். இந்தநிலையில் அந்த பெண்ணை தொடர்புகொண்டு பேசிய மர்மநபர், அவருடைய செல்போனுக்கு ஒரு லிங்கை அனுப்பியுள்ளார்.

பின்னர் அந்த பெண், அந்த லிங்கிற்குள் சென்றபோது டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், அப்பெண்ணிடம் குறைந்த தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினார்.

இதை நம்பிய அந்த பெண், முதலில் ரூ.10 ஆயிரம் செலுத்தினார். அவருக்கு ரூ.16 ஆயிரம் திரும்ப கிடைத்தது. அதன் பின்னர் கடந்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலான நாட்களில், பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.11 லட்சம் அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.

ரூ.11 லட்சம் மோசடி

ஆனால் பணத்தைப்பெற்ற மர்ம நபர், டாஸ்க் முடித்த பின்னரும் அப்பெண்ணுக்கு சேர வேண்டிய தொகையை அனுப்பவில்லை. அந்த பெண் மர்மநபருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்- ஆப் என வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் இதுகுறித்து சிவமொக்கா மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story