கர்நாடகா தேர்தல் : முக்கிய தலைவர்களின் வாரிசுகளின் வெற்றி-தோல்வி...!


கர்நாடகா தேர்தல் : முக்கிய தலைவர்களின் வாரிசுகளின் வெற்றி-தோல்வி...!
x

கர்நாடகா தேர்தலில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்.

பெங்களூரு :

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 127 இடங்களிலும், பாஜக 68 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், முக்கிய தலைவர்களின் வாரிசுகளின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்.

ராமநகரா தொகுதியில் முன்னாள் முதல் மந்திரியும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இக்பால் உசேன் நின்றார். பாஜக சார்பில் கவுதம் மாரிலிங்ககவுடா போட்டியிட்டார்.

தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, நிகில் குமாரசாமி பின்தங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் உசேன், நிகில் குமாரசாமியை விட 9,609 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

2018 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸின் இக்பால் உசேனை தோற்கடித்து, ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் எச்டி குமாரசாமி இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் தனது மகனை களமிறக்கினார் குமாரசாமி. இந்நிலையில், நிகில் குமாரசாமி தோல்வி முகம் கண்டு வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே சித்தாப்பூர் தொகுதியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் சுபாஷ் சந்திர ரத்தோர், பாஜக சார்பில் மணிகண்ட ரத்தோட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, பிரியங்க் கார்கே முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளரை விட விட சுமார் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் பிரியங்க் கார்கே.

கடந்த 2018 இல், பிரியங்க் கார்கே, பாஜகவின் வால்மிக் நாயக்கை 4,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2013 தேர்தலிலும் சித்தாப்பூர் தொகுதியில் பிரியங்க் கார்கே வெற்றி பெற்றிருந்தார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் கோனி போட்டியிட்டார்.

தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, விஜயேந்திரா முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அங்கு மிகக்குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார்.

ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா மகன் விஜேந்திரா : 19936.

காங்கிரஸ் வேட்பாளர் கோனி : 1320

சுயேட்சை வேட்பாளர் நாகராஜ கவுடா 15,603


Next Story