வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது மத்திய மந்திரி ஷோபா பேட்டி


வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்  காங்கிரஸ் திணறி வருகிறது மத்திய மந்திரி ஷோபா பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 6:46 PM GMT)

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் காங்கிரஸ் அரசு திணறி வருகிறது என்று மத்திய மந்திரி ஷோபா குற்றம் சாட்டியுள்ளார்.

சிக்கமகளூரு

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் காங்கிரஸ் அரசு திணறி வருகிறது என்று மத்திய மந்திரி ஷோபா குற்றம் சாட்டியுள்ளார்.

200 யூனிட் இலவச மின்சாரம்

சிக்கமகளூரு மாவட்டம் கதிரிமிதிரி பகுதியில் மத்திய அரசு சார்பில் கேந்திரிய விஷ்வ வித்யாலயா பள்ளி கட்டப்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டுமான பணிகளை மத்திய மந்திரி ஷோபா நேற்று பார்வையிட்டார். அப்போது கட்டிடப்பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை அழைத்து பணிகளை துரிதமாக முடிக்கும்படி உத்தரவிட்டார். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரி ஷோபா கூறியதாவது:-

விரைவில் இந்த கட்டிடப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிடும். 3 மாதங்களுக்குள் இந்த பள்ளியை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலுக்கு முன்பு வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி விட்டனர். ஆனால் தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறது.தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல், மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக கூறிவிட்டு, பொதுமக்களிடம் மின் கட்டணத்தின் பழைய பாக்கியை 3 மடங்காக உயர்த்தி வசூல் செய்து வருகின்றனர்.

அரிசி கொள்முதல்

இதனால் பொதுமக்கள் ஆளும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளனர். அதேபோல மத்திய அரசு அரிசி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். மத்திய அரசு சார்பில் ஏற்கனவே ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் மீதமுள்ள 5 கிலோ அரிசியையும், மத்திய அரசே வழங்கவேண்டும் என்று அடம்பிடிக்கிறது. அப்படியென்றால் மாநில அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது.

வேறு மாநிலத்தில் இருந்து அரிசியை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கலாம். ஆனால் அந்த பணிகளை செய்யாமல், மத்திய அரசு மீது குறை கூறுவது ஏற்று கொள்ள முடியாது. இதை வைத்து பார்க்கும்போது மாநில அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது என்று தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story