சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற மீனவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை - கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற மீனவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற மீனவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை - கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே உள்ள எம்.ஜி.ஆர் திட்டு வடக்கு தெருவைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ஜானி என்ற அன்புதாஸ்(வயது38). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இதனால் மீன்பிடி தொழிலுக்காக பழையாறுக்கு சென்ற போது, அங்கு வலை பின்னும் தொழிலுக்காக வந்திருந்த நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா தென்னலக்குடியைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பு ஏற்பட்டது.

அதனால் அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த பெண்ணின் மகளுடன்(16 வயது) அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தாயார் வீடு கட்டுவதற்காக ஜானியிடம் 5 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு அவர், வீடு கட்ட பணம் தர வேண்டுமானால் உன் மகளுடன் ஒரு நாள் உல்லாசமாயிருக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரிடம் ஜானி நிபந்தனை விதித்தார்.

அதற்காக அவர் அந்த பெண்ணையும், அவரது மகளையும் சீர்காழியில் இருந்து கடலூருக்கு பஸ்சில் அழைத்து வந்தார். கடலூரில் ஒரு லாட்ஜில் வாடகைக்கு அறை எடுத்து அவர்களுடன் தங்கினார். அப்போது அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதன் பிறகு கடந்த 3-7-2014-ந்தேதி அவர் தென்னலக்குடிக்கு சென்று சிறுமியை கடத்திக்கொண்டு கடலூருக்கு வந்து ஒரு தங்கும் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினார். அங்கு அவர் தொடர்ந்து 5 நாட்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதன் பிறகு 8-7-2014-ந்தேதி மாலையில் அறையை காலி செய்து விட்டு சிறுமியை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான எம்.ஜி.ஆர். திட்டுக்கு சென்றார். அப்போது அந்த சிறுமி அவரிடம் உங்கள் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டு செல்லுங்கள் என வற்புறுத்தினார்.

அதனால் ஆத்திரம் அடைந்த ஜானி அவளது முகத்தில் பல தடவை ஓங்கி குத்தியுள்ளார், இதனால் வலி தாங்காமல் ஓடிய சிறுமியை பிடித்து கட்டையால் சரமாரியாக அடித்து அவளது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் அவள் உடலை தன் தோள் மீது போட்டு சுமந்து கொண்டு எம்.ஜி.ஆர். திட்டு வடக்கு பகுதியில் உள்ள புதுவாய்க்காலுக்கு சென்று தண்ணீரில் பிணத்தை வீசி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறி ஜானி மீது பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட ஜானி என்ற அன்புதாஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றத்துக்காக அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 81 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி டி.லிங்கேஸ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார்.

இவ்வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜானி என்ற அன்புதாஸ் மீது ஏற்கனவே விழுப்புரம், காஞ்சீபுரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 5 கொலை வழக்குகள் உள்ளன. இதனால் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை இந்த வழக்குக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றியிருந்தனர்.

இந்த நிலையில் நாகை சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் செல்வபிரியா கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com