கிளித்தான்பட்டறையில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

காட்பாடி பகுதியில் உள்ள கிளித்தான்பட்டறை தாமரைகுளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டனர். இதனை ‘ஜல்சக்தி அபியான்’ திட்ட தொழில்நுட்ப அலுவலர் பிரசன்னகுமார் பண்டிட் பார்வையிட்டார்.
கிளித்தான்பட்டறையில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்
Published on

காட்பாடி,

காட்பாடி தாலுகா கிளித்தான்பட்டறையில் 3.31 ஏக்கர் பரப்பளவில் தாமரைகுளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர் அசுத்தமாகவும், தாமரை செடிகள், முட்செடிகள், புதர்கள் வளர்ந்து பயன்பாடற்ற நிலையில் காணப்பட்டது. எனவே குளத்தை தூர்வாரி சீரமைக்க அப்பகுதி இளைஞர்கள் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து வினோத் தலைமையில் 20 இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் நேற்று பொதுமக்களுடன் இணைந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக குளத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தை தூர்வார தொடங்கினர். பல்வேறு கட்டங்களாக குளம் தூர்வாரப்படுவதாகவும், குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டு நடைபாதை அமைக்கப்படுவதாகவும் இளைஞர் குழுவினர் தெரிவித்தனர்.

இப்பணியை புதுடெல்லியை சேர்ந்த ஜல்சக்தி அபியான் திட்ட தொழில்நுட்ப அலுவலர் பிரசன்னகுமார் பண்டிட் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் பகுதியில் உள்ள குளம், குட்டைகளை சீரமைக்க முன்வர வேண்டும். குடிநீர் என்பது அத்தியாவசியமானது. அதனை பாதுகாக்க வேண்டும். மழைநீரை சேமிக்க வேண்டும். வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என்றார்.

அவருடன் 100 நாள் வேலை உதவி திட்ட அலுவலர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், திருமால், பாஜமதி, வேலூர் மாநகராட்சி உதவி கமிஷனர் மதிவாணன், உதவிசெயற்பொறியாளர்கள் பாஸ்கரன், நித்யானந்தம், உதவிபொறியாளர் செல்வராஜ், சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

அதேபோன்று காட்பாடி பவானிநகரில் சுவாசம் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்தில் குளம் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதனை ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரி மற்றும் வேலூர் மாவட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com