புதுமாப்பிள்ளை கொலை: அரசு பஸ் டிரைவர்கள் 2 பேர் கைது

குளச்சல் அருகே புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக அரசு பஸ் டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நகைக்காக கொன்றதாக அவர்கள் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
புதுமாப்பிள்ளை கொலை: அரசு பஸ் டிரைவர்கள் 2 பேர் கைது
Published on

குளச்சல்,

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் டார்வின் ராஜா (வயது 25). இவருக்கும், குளச்சல் அருகே உள்ள குழவிளையை சேர்ந்த ராஜசேகர் மகள் அர்சயா ராஜிலின் (22) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ராஜசேகர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டிராவல்ஸ் நிறுவனத்தை புதுமாப்பிள்ளை டார்வின் ராஜா நடத்த தொடங்கினார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி மதியம் டார்வின் ராஜா வீட்டுக்கு சாப்பிட வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து புறப்பட்டவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி குளச்சல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மறுநாள் குளச்சல் அருகே உள்ள வெள்ள மணல் பகுதியில் குளத்தின் கரையில் டார்வின் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

டார்வின் ராஜாவை கொலை செய்தவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் டார்வின் ராஜாவின் மனைவி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடீர் திருப்பமாக டார்வின் ராஜா மனைவியின் உறவினர், தனது நண்பருடன் சேர்ந்து நகைக்காக இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து ராஜசேகரின் அண்ணன் மகன் குழவிளையை சேர்ந்த மோகன்ராஜ் (42), அவருடைய நண்பர் பாலப்பள்ளம் பரப்புவிளையை சேர்ந்த ஜெயசெல்வின் (43) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் அரசு பஸ் டிரைவர்கள் ஆவார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 3 பவுன் கைச்செயினை போலீசார் மீட்டனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான மோகன்ராஜ் போலீசாரிடம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வந்த போதிலும் எனக்கு பணக்கஷ்டம் இருந்து வந்தது. இந்த நிலையில் டார்வின் ராஜா அணிந்து இருந்த தங்கச்சங்கிலி மற்றும் கைச்செயினை பார்த்ததும் அவற்றை கொள்ளையடித்தால் நம் பிரச்சினை தீரும் என்று முடிவு செய்தேன்.

அதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி மதியம் நானும் ஜெயசெல்வினும் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றோம். அதே சமயம் டார்வின் ராஜா சாப்பிடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். நான் அவரிடம் அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்று இளநீர் குடித்து விட்டு செல்லலாம் என்று கூறினேன். அதை நம்பி அவர் எங்களுடன் வந்தார். வெள்ளமணல் பகுதிக்கு சென்றதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தென்னந்தோப்புக்குள் 3 பேரும் சென்றோம். அப்போது எந்த இளநீரை வெட்டலாம் என்று நான் டார்வின் ராஜாவிடம் கேட்டேன். அவர் தலையை தூக்கி மரத்தை பார்த்தார். அப்போது நான் அரிவாளால் அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு, அவர் அணிந்து இருந்த நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு சென்றோம். பாலப்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் 3 பவுன் கைச்செயினை அடமானம் வைத்து ரூ.46 ஆயிரம் வாங்கினோம். அந்த பணத்தை நாங்கள் 2 பேரும் பங்கு போட்டு கொண்டோம்.

மேற்கண்டவாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com