

கொடைக்கானல்,
மலைகளின் இளவரசி கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை குளு குளு சீசன் நிலவும். இந்த ஆண்டு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்வதின் காரணமாக தற்போது குளு குளு சீசன் தொடங்கிய சூழ்நிலை நிலவுகிறது. அத்துடன் படகு சவாரி செய்யும் நட்சத்திர ஏரியிலும் அதிக அளவு தண்ணீர் உள்ளது. மழையின் காரணமாக நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் கோடை காலத்தில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு வழங்கும் 2 அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் குடிநீர் பிரச்சினை இருக்காது. இந்த ஆண்டு குளு, குளு சீசன் தொடங்கியதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மோயர்பாயிண்ட், குணா குகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனிடையே சீசன் தொடங்கியுள்ளதையொட்டி நகரில் உள்ள தங்கும் விடுதிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சீசன் தொடங்கியுள்ளதால் இதனை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.