

புதுச்சேரி
புதுச்சேரியில் போலி பத்திரம் மூலம் நிலங்கள் அபகரிப்பு தொடர் கதையாகி வருகிறது. அதாவது அரசுக்கு சொந்தமான இடங்கள், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் புதுவை அரசின் அனைத்து துறை அலுவலர்களுக்கும், தலைமை செயலரின் சிறப்பு பணி அலுவலர் பங்கஜ்குமார் ஜா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அனைத்து துறை தலைவர்களும் தங்கள் துறையின் கீழ் உள்ள அனைத்து அரசு நிலங்களின் இருப்பு விவரங்கள், ஆக்கிரமிப்பு இருந்தால் அதன் விவரங்களை அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை, தற்போதைய நிலை ஆகியவற்றை திட்டம், ஆராய்ச்சித்துறை பரிந்துரைத்த விண்ணப்பத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேவையான விவரங்களை வருகிற 13-ந் தேதிக்குள் ஆராய்ச்சித்துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.