கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கரூரில் அகல்விளக்குகள் விற்பனை அமோகம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனால் கரூர் கடைவீதிகளில் அகல்விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கரூரில் அகல்விளக்குகள் விற்பனை அமோகம்
Published on

கரூர்,

தீப திருநாளான திருக்கார்த்திகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தன்று அக்னியாய் சிவந்து அறந்தை கூறிய சிவனின் தரிசனம் வேண்டி கார்த்திகை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் அன்று விரதமிருந்து, நெல் பொரி அல்லது அவல் பொரியை படைத்து வீடு மற்றும் நாம் இருக்கும் இடங்களில் விளக்கேற்றி வழிபடுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீட்டின் முன்பு மற்றும் மாடிப்பகுதியில் வரிசையாக அகல் விளக்குகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றுவார்கள். மேலும் வீட்டையே கோவிலாக மாற்றும் வகையில் வீடு, வாசல் முழுவதும் விளக்குகளை ஏற்றி கொண்டாடுவார்கள்.

விற்பனை அமோகம்

மேலும் வணிக நிறுவனங்கள், கோவில்களில் அதிக அளவிலான விளக்குகள் ஏற்றப்படும். சிவன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும். தீபநாளையொட்டி கரூரில் ஜவகர்பஜார், கரூர் பஸ்நிலையம், திருமாநிலையூர், சுங்ககேட், காந்திகிராமம், தான்தோன்றிமலை, வெங்கமேடு உள்ளிட்ட இடங்களில் அகல்விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் பலவிதமான அகல்விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு விற்பனை செய்தனர். அவற்றை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ரூ.3 முதல் ரூ.50 வரையிலும், பெரிய அளவிலான அகல் விளக்குகள் ரூ.120 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com