

பெங்களூரு:
பசவராஜ் பொம்மை
விஜயாப்புரா ஞானயோகா ஆசிரமத்தின் தலைவர் சித்தேஸ்வர் சுவாமி மறைவுக்கு முதல்-மந்திரி உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விஜயாப்புரா ஞானயோகா ஆசிரமத்தின் தலைவர் சித்தேஸ்வர் சுவாமி மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த துக்கம் அடைந்துள்ளேன். தனது சொற்பொழிவுகள் மூலம் மனித சமூகத்தின் மேன்மைக்காக பாடுபட்டார். இந்த விஷயத்தில் அவரது சேவை முக்கியமானது. அவரது மறைவு கர்நாடகத்திற்கு மிகுந்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன். அவரது பக்தர்களுக்கு துக்கத்தை தாங்கும் பலத்தை இறைவன் வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், "இந்த உலகிற்கு நல்ல பாதையை சித்தேஸ்வர் சுவாமி காட்டி சென்றுள்ளார். மிக எளிமையானவர், அறிவாற்றல் மிக்கவர். இந்த சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவைக்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது பக்தர்கள், பின்தொடர்வோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில், "ஞானயோகா ஆசிரம தலைவர் சித்தேஸ்வர் சுவாமி மறைந்த செய்தியால் துக்கம் அடைந்துள்ளேன். ஆன்மிக சொற்பொழிவுகள் மூலம் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்திய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரது ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன். அவரது இழப்பை தாங்கும் சக்தியை பக்தர்களுக்கு இறைவன் வழங்கட்டும்" என்றார்.
தேவேகவுடா-எடியூரப்பா
முன்னாள் பிரதமர் தேவேகவுடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஞானயோகா ஆசிரம தலைவர் சித்தேஸ்வர் சுவாமி மறைந்த செய்தி கேட்டு துக்கம் அடைந்தேன். நடமாடும் கடவுள் என்று பெயர் பெற்ற அவரது ஆத்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன். அவரது பக்தர்களுக்கு இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை வழங்க வேண்டுடும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டரில், "தனது சொற்பொழிவுகள் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு ஞானத்தை வழங்கியவர் சித்தேஸ்வர் சுவாமி. அவரது மறைவு எனக்கு அதீத துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன்" என்றார்.
குமாரசாமி
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில், "நமக்கு நடமாடும் விளக்கு, நடமாடும் அறிவு, நடமாடும் கடவுளாக திகழ்ந்த ஞானயோகா ஆசிரமத்தின் தலைவர் சித்தேஸ்வர் சுவாமி மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த துக்கம் அடைந்தேன். ஞானத்தின் விளக்கை ஏற்றினார். அவரது மரணம் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விட்டு சென்றுள்ள அறிவு நமக்கு திவ்ய விளக்கு ஆகும். இந்த விளக்கின் வெளிச்சத்தில் நாம் பயணிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.