வளரும் தலைமுறையை சீர்படுத்துவோம் - நளினா

பெற்றோரின் வளர்ப்பு முறைதான், வளரும் தலைமுறையைச் சீர்படுத்தி, சாதனையாளராகவும், வெற்றியாளராகவும் மாற்றும் என்பதை நான் முழுமையாக நம்புபவள். தங்கள் மூலம் உலகுக்கு வரும் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
வளரும் தலைமுறையை சீர்படுத்துவோம் - நளினா
Published on

ன்றைய காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் குடும்பப் பொறுப்புகளையும், வேலையையும், தங்களது லட்சியப் பாதைக்கான செயல்பாடுகளையும் ஒருசேர எதிர்கொள்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார் நளினா ராமலட்சுமி.

இவர் பிரபல சிமெண்ட் தயாரிப்பு குழுமத்தின் நிறுவனர் மகள். தந்தையின் குழுமத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல், குழந்தைகளின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி, பெற்றோர்-குழந்தை உறவை மேம்படுத்தும் நிறுவனத்தை நிறுவி, அதன் நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். அவரது பேட்டி.

"எனது சொந்த ஊர் ராஜபாளையம். தனியார் கல்லூரி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யில் கணிதம் சார்ந்த பட்டப்படிப்பு பயின்றேன். என்னுடைய அப்பா ராம சுப்ரமணிய ராஜா, அம்மா சுதர்சனம்மாள். படிப்பை முடித்தவுடன் எனக்குத் திருமணம் ஆனது. திருமணத்துக்குப் பின்னர் அமெரிக்காவில் குடியேறினேன். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

குழந்தை வளர்ப்பு சார்ந்த நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

திருமணத்துக்குப் பின்னும் எனது படிப்பைத் தொடர்ந்தேன். கணினி அறிவியலில் பட்டம் பெற்றேன். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றினேன். குழந்தைப்பேறுக்குப் பின்பு வேலையில் இருந்து விலகி முழு நேரமும் குழந்தைகளையும், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டேன்.

பெற்றோரின் வளர்ப்பு முறைதான், வளரும் தலைமுறையைச் சீர்படுத்தி, சாதனையாளராகவும், வெற்றியாளராகவும் மாற்றும் என்பதை நான் முழுமையாக நம்புபவள். தங்கள் மூலம் உலகுக்கு வரும் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இதை நினைவில் வைத்தே எனது குழந்தைகளை வளர்த்தேன். குழந்தை வளர்ப்பின் மீது எனக்கு ஈடுபாடு அதிகரித்தது. அதில் எனக்கு இருந்த ஆர்வமே, தற்போது எனக்கான வேலையாக மாறிவிட்டது.

குழந்தை வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களின் முயற்சி குறித்துச் சொல்லுங்கள்?

ஒவ்வொரு குழந்தைக்கும் தனது பெற்றோர் குறித்த கண்ணோட்டம் வெவ்வேறாக இருக்கும். ஆனால், அவர்களின் வெற்றிக்கும், நிறைவான வாழ்க்கைப் பயணத்துக்கும் பெற்றோரும், அவர்களது வளர்ப்பு முறையும்தான் படிக்கட்டுகளாக அமை

கின்றன. அதுதான் ஒரு குழந்தை எவ்வாறு மற்றவர்களுடன் பேச, பழக, நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. குழந்தைகளின் மனநலம், ஆரோக்கியம், நம்பகத்தன்மை, குடும்பம் மற்றும் சமூகத்துடனான உறவை மேம்படுத்த உதவுகிறது.

இந்த உலகில் அனைத்து வேலையைச் செய்வதற்கும் அதுசார்ந்த தனிப்பட்ட பயிற்சி இருக்கிறது. ஆனால், குழந்தையை வளர்ப்பதற்கான பயிற்சி என்பது, சிறுவயதில் நாம் நமது பெற்றோரைப் பார்த்துத் தெரிந்துகொண்ட அனுபவமாக மட்டுமே உள்ளது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான குழந்தைப் பருவ அனுபவம் இருக்கும். இந்த அனுபவத்தைக் கொண்டு இன்றைய தலைமுறையைச் சீர்படுத்துவது என்பது சற்று சிரமமானது.

அதற்கு உதவும் வகையில், குழந்தை நலம் மற்றும் வளர்ச்சி சார்ந்த சிறப்பு நிபுணர்களிடம் கலந்து ஆலோசிக்கும் வழிகளைப் பல பெற்றோர்களுக்கு ஏற்படுத்தித் தருகிறோம். இது சிறந்த பெற்றோராக நடந்துகொள்வதற்கும், அவர்களது கடமைகளைச் சரியாகச் செய்வதற்கும் உதவும்.

தவிர, ஆண்டுதோறும் சர்வதேச குழந்தைகள் தினத்தன்று 'கேட்ஜெட் இல்லா ஒரு மணி நேரம்' என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறோம்.

திருமணம், குழந்தைப்பேறு என நீண்ட இடைவெளிக்குப் பின்பு மீண்டும் பணியாற்றத் தொடங்கியபோது நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?

கல்வி, வேலை போன்ற எந்த விஷயத்திலும் எனது பெற்றோர் என்னை வற்புறுத்தியது இல்லை. 'நான் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று தங்களுடைய எந்த எதிர்பார்ப்பையும், எண்ணத்தையும் என்னிடம் திணித்தது இல்லை. என் மீது நம்பிக்கை வைத்து, எனது உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தார்கள். இதனால் தன்னம்பிக்கையோடு எதையும் கையாண்டேன். அவ்வாறு கிடைத்த அனுபவங்கள், நான் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

அமெரிக்காவில் இருந்தவரை குடும்பப் பொறுப்புகளையும், குழந்தைகளையும், வேலையையும் நான் மட்டுமே கவனித்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனால், இந்தியாவிற்கு வந்த பின்னர் எனது குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது.

வேலைச்சூழலில், பெற்றோரின் மன நிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிகாட்டுதலை உருவாக்கிக் கொடுப்பதில் அதிகப்படியான சவால்கள் இருந்தன. ஒவ்வொரு பெற்றோரின் மனநிலையும், ஒவ்வொரு விதமாக இருக்கும்.

குழந்தைகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்காக, அவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கு எந்த அளவுக்கு முயற்சிக்கிறார்கள்? அவர்களின் உணர்ச்சிகளையும், சூழலையும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை வகைப்படுத்துவதில் அதிக சவால்கள் இருந்தன. அவற்றை வல்லுனர்களின் உதவியுடன் செய்கிறேன்.

இலக்கை நோக்கி உங்களைத் தொடர்ந்து பயணிக்க வைக்கும் விஷயம் எது?

குழந்தைப்பேறுக்குப் பின்பு என்னை நான் ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல், கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டேன். கலை, அறிவியல் மற்றும் உளவியல் குறித்துப் படித்தேன். 'இது மட்டும்தான் நான் செய்ய வேண்டும்' என்று முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளவில்லை. ஒரு விஷயத்தைச் செய்யத் தொடங்கும்போது பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடலாம். ஆனால், நம் எண்ணம் தெளிவாக இருந்தால், அது நிச்சயமாக நம்மை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்ற நேர்மறை சிந்தனையோடு தொடர்ந்து பயணிக்கிறேன்.

இளம் தலைமுறைக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

வாழ்க்கை, வேலை என எதுவாக இருந்தாலும் தோல்வி ஏற்படுவது இயல்பானது. அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அதில் இருந்து வெற்றிக்கான வழியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களையும், உங்கள் முயற்சிகளையும் முழுமையாக நம்புகிற நபரைத் தேர்ந்தெடுத்து, அவருடன் சேர்ந்து பயணிப்பதே வளமான எதிர்காலத்துக்கான சரியான பாதைக்கு வழிவகுக்கும். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com