ஆத்தூர், தலைவாசலில் 2 தனியார் விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை

ஆத்தூர், தலைவாசலில் வேளாண்மை அதிகாரிகள் நேற்று உரக்கடைகளில் மேற்கொண்ட ஆய்வு முடிவில் 2 தனியார் விற்பனை நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்தனர்.
ஆத்தூர், தலைவாசலில் 2 தனியார் விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை
Published on

சேலம்

அதிகாரிகள் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் தற்போது பருவமழை பரவலாக பெய்து வருவதால் அனைத்து விவசாயிகளும் தங்களது தோட்டங்களில் பயிர் சாகுபடி செய்ய முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேளாண்மை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் உரக்கடைகளில் உரங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்காணித்து தடுக்க ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் உள்ள உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களில் வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) கவிதா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அவர்கள் உரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? எனவும் கண்காணித்தனர்.

உரிமம் ரத்து

இதைத்தொடர்ந்து உரக்கட்டுப்பாடு விதி மீறல்களில் ஈடுபட்டதாக 2 தனியார் விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:-

வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களும் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை பயிர் சாகுபடி பரப்பிற்கு ஏற்றவாறு ஆதார் எண்ணை பயன்படுத்தி பி.ஓ.எஸ். விற்பனை முனைய கருவிகளின் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். மூட்டையின் மேல் உள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

மொத்த விற்பனையாளர்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்கள் மாற்றம் செய்யக்கூடாது. அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. உரக்கட்டுப்பாடு விதிமீறல்கள் மற்றும் பூச்சி மருந்து சட்ட விதி மீறல்களில் ஈடுபடும் விற்பனை நிலையங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com