லிப் பாம் தயாரிப்பு

லிப் பாம் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து அவற்றை மிருதுவாக்கும். உதடுகளில் இருக்கும் கருமையை நீக்கி இயற்கையான நிறத்தை கொடுக்கும்.
லிப் பாம் தயாரிப்பு
Published on

தடுகளின் வறட்சியை நீக்கி, மென்மையாக வைத்திருக்க உதவும் அழகு சாதனப் பொருள் 'லிப் பாம்'. இயற்கையான பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட 'லிப் பாம்' உபயோகிப்பதே சிறந்தது. தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்காமல், வீட்டிலேயே 'லிப் பாம்' தயாரித்து பயன்படுத்த முடியும். இதை உங்கள் தேவைக்கு மட்டும் உபயோகிக்காமல், அதிகமாக தயாரித்து விற்பனையும் செய்யலாம். அதைப் பற்றிய குறிப்புகள் இங்கே…

லிப் பாம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 1

தேங்காய் எண்ணெய் - 30 கிராம்

தேன் மெழுகு - 5.5 கிராம்

வைட்டமின் ஈ எண்ணெய் - 2 துளிகள்

செய்முறை:

பீட்ரூட்டை சுத்தம் செய்து மேல் தோலை நீக்கி துருவிக்கொள்ளவும். இதனை நன்றாகப் பிழிந்து சாறு எடுக்கவும். பின்பு சுத்தமான மெல்லிய பருத்தித் துணியில் இந்தச் சாற்றை வடிகட்டவும். இவ்வாறு 7 டேபிள் ஸ்பூன் அளவு பீட்ரூட் சாற்றை தயாரித்துக் கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் பீட்ரூட் சாறு மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய் இவை இரண்டையும் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இதை மிதமான தீயில் அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.

தண்ணீர் முழுவதுமாக வற்றி எண்ணெய் பிரியும் நேரத்தில் அடுப்பை அணைத்து கலவையை வேறு பாத்திரத்தில் ஊற்றவும். இத்துடன் தேன் மெழுகு சேர்த்து கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதற்குள் இந்தக் கலவையை வைத்து டபுள் பாயிலிங் முறையில் சூடுபடுத்தவும்.

தேன்மெழுகு முழுவதுமாக கரைந் ததும் வெளியில் எடுத்து அதில் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலக்கவும். கலவை ஆறியதும் நன்றாகக் கிளறிய பிறகு, சுத்தமான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி காற்று புகாமல் பத்திரப்படுத்தவும். கைகளை நன்றாக சுத்தப்படுத்திய பின்பு, இந்த லிப் பாமை எடுத்து உதடுகளின் மீது மென்மையாக தடவவும். இதை 3 வாரங்கள் வரை உபயோகிக்க முடியும்.

இந்த லிப் பாம் தயாரிக்கும்போது, கடைசியாக ஜியோ கார்டு (Geogard) 221 எனும் பதப்படுத்தியை 0.30 கிராம் அளவு சேர்த்து கலக்கினால், 6 மாதங்கள் வரை கெடாமல் பயன்படுத்த முடியும்.

நன்மைகள்:

இதை சிறிய அளவில் தயாரிப்பதற்கு அதிக முதலீடு தேவையில்லை. மேற்சொன்ன அளவில் தயாரிப்பதற்கான செலவு மொத்தமே ரூ.200-க்கு குறைவாகவே ஆகும். இதற்கான மூலப் பொருட்களை அருகில் இருக்கும் கடைகளிலேயே வாங்க முடியும். லிம் பாம் குப்பிகளை இணையத்தின் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்ய முடியும்.

முதலில் நீங்கள் உபயோகித்து அதன் நிறை, குறைகளை அறிந்து கொள்ள வேண்டும். பிறகு உங்கள் நண்பர்கள் வட்டத்தில் அளித்து அவர்களுடைய பின்னூட்டத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்பு உங்கள் தயாரிப்பை ஊக்கமுடன் சந்தைப்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com