சிவபெருமானின் நெற்றிக்கண் உணர்த்தும் தத்துவம்

தியானத்தை கலைக்க முயற்சி செய்த மன்மதனை சிவபெருமானின் நெற்றிக்கண் எரித்து சாம்பலாக்கியது.
சிவபெருமானின் நெற்றிக்கண் உணர்த்தும் தத்துவம்
Published on

சிவபெருமான் புலித்தோல் ஆடை, கழுத்தில் பாம்பு, ருத்ராட்சம், கையில் திரிசூலம், உடுக்கை, உடல் முழுவதும் திருநீறு, தலையில் கங்காதேவி, பிறை இவற்றுடன் காட்சி அளிப்பார். இவற்றுடன் அவருக்கு மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக்கண் இருப்பதாக அனைத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. இது மற்ற எந்த கடவுளுக்கும் இல்லாத சிறப்பாக உள்ளது. இந்த நெற்றிக்கண், சிவபெருமானின் கோபத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

சிவபெருமானுக்கு அதிக கோபம் ஏற்படும் போது இந்த நெற்றிக்கண் திறக்கும் என கேள்விப்பட்டிருப்போம். அந்த சமயத்தில் சிவபெருமானின் எதிரில் இருக்கும் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். இந்த நெற்றிக்கண் குறித்து பல புராண கதைகள் கூறப்படுகிறது. அவை உணர்த்தும் சில தத்துவத்தை காண்போம்.

ஒரு முறை சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த காமதேவனான மன்மதன், சிவபெருமானின் தியானத்தை கலைக்க முயற்சி செய்தான். இதனால் தியானத்தில் இருந்து விழித்த சிவபெருமான் மிகுந்த கோபம் அடைந்தார். இதன் விளைவாக தனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக்கண்ணை திறந்தார். அப்போது அதில் வெளிப்பட்ட நெருப்பு பிளம்பானது காமதேவனை எரித்து சாம்பலாக்கியது. இதன்மூலம் நாம் அறிந்து கொள்வது ஒருவரின் ஆன்மிக பாதையில் யாரும் குறுக்கிடக்கூடாது. அப்படி குறுக்கிட்டால் அவருக்கு அழிவு நிச்சயம் என்பதாகும்.

சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணை திறக்கும் போது உலகம் அழிந்துவிடும் என கூறப்படுகிறது. பூமியில் பாவங்கள் அதிகரிக்கும் போது சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணை திறப்பார். அப்போது உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அழிந்து, புதிய உலகம் பிறக்கும் என நம்பப்படுகிறது. இதன்மூலம் அவரது மூன்றாவது கண் எதிர்காலத்தை குறிப்பதாக உள்ளது.

சிவனின் ஒரு கண் சூரியனையும், மற்றொரு கண் சந்திரனையும் குறிப்பதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் பார்வதி தேவி விளையாட்டாக சிவனின் இரண்டு கண்களையும் கைகளால் மூடினார். இதனால் உலகம் முழுவதும் இருண்டுவிட்டது. உலகம் இருளில் மூழ்கியதை அடுத்து உலக உயிர்கள் அனைத்தும் வருந்தின. உடனே சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணை திறந்தார். இதன்மூலம் உலகத்துக்கு மீண்டும் வெளிச்சம் கிடைத்தது.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது, மனிதராகிய நம் அனைவரிடமும் மூன்றாம் கண் உள்ளது. அது உலகத்தை பார்க்கும் இரண்டு கண்களையும் தவிர்த்து, அனைவரும் பயன்படுத்த வேண்டிய மனக்கண்ணே ஆகும். அந்த மூன்றாவது கண்ணை பயன்படுத்தினால் உலகத்தில் அமைதி நிலவும் என்பதையே இது உணர்த்துகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com