

போத்தனூர்,
இந்த கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவை மாவட்டம் குளத்துப்பாளையம் பகுதியில் இருந்து செப்டிக்டேங்க் கழிவுகளை ஏற்றிக்கொண்டு நேற்று மினி லாரி ஒன்று மதுக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை நாகப்பட்டினத்தை சேர்ந்த தியாகராஜன்(வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த லாரியில், பச்சாபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (28), உப்பிலிபாளையத்தை சேர்ந்த மாசாணி (38) ஆகியோர் உடன் இருந்தனர்.
மினிலாரி குரும்பபாளையம் பிரிவு அருகே சென் றது. அப்போது எதிரே வந்த லாரியும், மினிலாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் லாரிகளின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் லாரிகளில் இருந்தவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. லாரிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களின் அலறல் சத்தம் மட்டும் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள் லாரிகளுக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யாரையும் மீட்க முடியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுக்கரை போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். 2 லாரிகளும் நேருக்குநேர் மோதி இருந்ததால் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது மினிலாரி டிரைவர் தியாகராஜன் இறந்தது தெரியவந்தது. ஆனால் அவரது உடலை மீட்க முடியவில்லை. இதையடுத்து அந்த லாரியில் இருந்த சதீஷ்குமார், மாசாணி மற்றும் மற்றொரு லாரியை ஓட்டி வந்த பச்சாபாளையத்தை சேர்ந்த சந்திரகுமார் (35) ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிருக்கு போராடிய அவர்கள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்துக்குள்ளான லாரிகளை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கி இருந்த தியாகராஜனின் உடல் மீட்கப்பட்டது.
தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன போக்குவரத்து மிகுந்த நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் அந்த பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.