

இதையொட்டி நேற்று காலை பழைய வண்ணாரப்பேட்டை நாராயண நாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் இருந்து இரட்டை குதிரை பூட்டிய அலங்கரிக்கப்பட்ட சாரட்டு வண்டியில் அய்யா அருளிய அகிலத்திரட்டு ஆகமத்தை வைத்து ஊர்வலமாக சென்றனர்.
அதன்பின்னால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநாமக்கொடி ஏந்தி பாதயாத்திரையாக மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிக்கு சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், லதா நாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த ஊர்வலம் நல்லப்ப வாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, டி.எச்.ரோடு மணலி புதுநகர் வழியாக அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு செல்லும் வழியில் உபயதாரர்கள் நீர், மோர் வழங்கினர். திருவொற்றியூர் டி.எஸ்.எஸ். நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பில் அதன் தலைவர் ஆர்.பி. மனோகரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு காலை உணவு வழங்கினர்.
ஊர்வலம் தர்மபதியை அடைந்ததும் பகல் பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலையில் ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு, பணிவிடை, அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் வைகுண்ட ஜோதி ஏற்றி இனிமம் வழங்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.