

அரியாங்குப்பம்
மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அரசு கொறடாவும், மாநில துணை தலைவருமான அனந்தராமன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் அபிஷேகபாக்கத்தில் இலவச மனைப்பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணவெளி தொகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் புதிய மதுக்கடை திறக்க அரசு அனுமதிக்க கூடாது. சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் கட்டாய வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். கடற்கரைக்கு வரும் உள்ளூர் பொதுமக்களின் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.