சிவகங்கை மாவட்டம் கட்டுகுடிபட்டியில் மஞ்சுவிரட்டு; 10 பேர் காயம்

சிவகங்கை மாவட்டம் கட்டுகுடிபட்டியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் கட்டுகுடிபட்டியில் மஞ்சுவிரட்டு; 10 பேர் காயம்
Published on

எஸ்.புதூர்,

சிவகங்கை மாவட்டம் கட்டுகுடிபட்டியில் உள்ள செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பெண்கள் மாலையில் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

மேலும் ஆரத்திகுடம், பால்குடம், பூத்தட்டு ஏந்தி வந்து சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அடுத்தநாள் பெண்கள் கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். விழாவின் கடைசி நாளான நேற்று மஞ்சுவிரட்டு கோவில் முன்பாக உள்ள கண்மாயில் நடைபெற்றது.

முன்னதாக கோவில் காளைக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவிக்கப்பட்டு முதலாவதாக அவிழ்த்துவிடப்பட்டது. தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் தொழுவில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.

இதில் மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு காளைகளை அடக்கி பிடித்தனர். பல காளைகள் மாடுபிடி வீரர்களிடம் அடங்காமல் ஓடியது. இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலமாக முதல் உதவி அளித்தனர். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் மணலூர் கிராம நிர்வாக அதிகாரி சிவசங்கரி கொடுத்த புகாரின் பேரில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கட்டுகுடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜகணேசன், குமரேசன், கணேசன், செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com