தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்

இன்று (அக்டோபர் 13-ந்தேதி) தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார்.
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
Published on

சிறைத்தண்டனை

சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற கிராமத்தில் 1895-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் வள்ளியம்மை. விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தார்.

மெட்ராஸ் மாகாணத்தில் ஆந்திராவின் பெரும்பகுதியும், கர்நாடகாவின் பெல்லாரி போன்ற பகுதிகளும், கேரளாவின் மலபார் போன்ற பகுதியும் இணைந்து இருந்தன. சென்னையைச் சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் 1952-ம் ஆண்டு ஆந்திராவை சென்னையில் இருந்து தெலுங்கர்கள் வாழும் தனி மாநிலமாக பிரித்து தரக்கோரி 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். அவரது போராட்டம் காரணமாக எழுந்த எழுச்சியால் ஆந்திர மாநிலம் உருவானது.

தமிழ்நாடு

1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர் கர்நாடகா, கேரளா போன்றவை மொழிவாரி மாநிலங்களாக உருவானது. மிச்சம் மீதி இருந்த பகுதி மெட்ராஸ் மாகாணமாக தொடர்ந்தது. தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பிறகும் கூட தமிழ்நாடு என்ற பெயரை வைக்க மறுப்பதை ஏற்க முடியாது. இனி தமிழர்கள் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் தமிழ்நாடு என்று எழுத வேண்டும் என்றார் தந்தை பெரியார். தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி, தமிழரசு கழகம் உள்ளிட்ட கட்சிகளும் இதை வலியுறுத்தின. காங்கிரசில் இருந்த சிலருக்கும் இந்த எண்ணம் இருந்தது.

உண்ணாவிரதம்

பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டது காங்கிரசைச் சேர்ந்த சங்கரலிங்கனாருக்கு தூண்டுதலை ஏற்படுத்தியது. தமிழர்களின் நிலப்பரப்பை தமிழ்நாடு என மாற்றக்கோரி 1956 ஜூலை மாதம் 27-ந்தேதி விருதுநகர் சூலக்கரைமேட்டில் தனிநபராக உண்ணாவிரதம் தொடங்கினார். அந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தது. பாதுகாப்புகருதி வேறு இடத்தில் உண்ணாவிரதத்தை தொடர வேண்டும் என்று பொதுவுடைமை கட்சியினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். சங்கரலிங்கனாருக்கு கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.

கைவிட மறுப்பு

60 நாட்கள் கடந்ததும், சங்கரலிங்கனாரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்தது. ம.பொ.சி., காமராஜர், அண்ணா, ஜீவா, ஆகியோர் விருதுநகருக்கு சென்று சங்கரலிங்கனாரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.

வீரமரணம்

76 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த புனிதரின் உயிர்ப்பறவை 1956-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி அவர் நெஞ்சக்கூட்டில் இருந்து பறந்து சென்றது. காங்கிரஸ் கட்சிக்காரர் என்றாலும் தன் கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ் கட்சியை நம்பாமல் தான் மரணம் அடைந்தவுடன் உடலை அடக்கம் செய்யும் பொறுப்பை கம்யூனிஸ்டு கட்சியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சங்கரலிங்கனார் கூறியிருந்தார்.

உடல் தகனம்

அதன்படி அவரது உடல் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதுரை தத்தனேரி சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. சங்கரலிங்கனார் மறைவு செய்தி தமிழக அரசியலில் அதிர்ச்சியையும் சலசலப்பையும் உண்டாக்கியது. கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

சங்கரலிங்கனாரின் கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்கு பின் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் தனி மசோதா கொண்டு வரப்பட்ட போதும், மாநில சட்ட சபையில் தமிழ்நாடு பெயர் சூட்டி தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் முடிவு எதுவும் கிடைக்கவில்லை.

பெயர் மாற்றம்

1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்-அமைச்சரானதும், 1968 ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பேரவை தலைவர் சி.பா.ஆதித்தனார் அனுமதியுடன் அண்ணா, 'தமிழ்நாடு' என மூன்று முறை கூற ''வாழ்க'' என்று உறுப்பினர்கள் விண்ணதிர முழக்கமிட்டார்கள்.

1968 நவம்பர் மாதம் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1968 டிசம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு பெயர் மாற்றம் விழாவாக கொண்டாடப்பட்டது

1969 ஜனவரி 14-ந்தேதி பொங்கல் முதல் அதிகாரபூர்வமாக மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆனது. சங்கரலிங்கனாரின் தியாகத்தை அறிஞர் அண்ணா உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் போற்றினர்.

சங்கரலிங்கனாரின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசால் விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com