மாத்தூர் கோவில் திருவிழா

மாத்தூர் பீளிக்கான் முனீஸ்வரர், அங்காள ஈஸ்வரி கோவில் திருவிழா நடைபெற்றது
மாத்தூர் கோவில் திருவிழா
Published on

ஆவூர்

விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாத்தூர் சொக்கலிங்கபுரத்தில் பீளிக்கான் முனீஸ்வரர், அங்காள ஈஸ்வரி, சக்தி விநாயகர், முன்னோடி பூச்சி அய்யா ஆகிய தெய்வங்களின் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீ மிதி விழா விமரிசையாக நடைபெறும்.. அதேபோல இந்த ஆண்டும் 58-ம் ஆண்டு தீமிதி விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 18-ந் தேதி கோவிலில் காப்பு கட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாத்தூரில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் பீளிக்கான் முனீஸ்வரர் மற்றும் அங்காள ஈஸ்வரி சாமி வீதி உலா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அப்போது அப்பகுதியிலுள்ள ஊரணியில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் மாத்தூர், மண்டையூர், திருச்சி, விமான நிலையம், குண்டூர், பர்மா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் தீமிதி விழா நிறைவு பெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com