அதிகபட்சமாக அர்ஜூனா 5,725 கிலோ: தசரா யானைகளுக்கு, எடை அளவு பரிசோதனை

மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் அபிமன்யு உள்பட 9 யானைகளுக்கு எடை அளவு பார்க்கப்பட்டன. நாளை மறுநாள் முதல் நடைபயிற்சி தொடங்குகிறது.
அதிகபட்சமாக அர்ஜூனா 5,725 கிலோ: தசரா யானைகளுக்கு, எடை அளவு பரிசோதனை
Published on

மைசூரு:

மைசூரு தசரா விழா

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தசரா விழாவில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க 14 யானைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு, அர்ஜூனா, பீமா, கோபாலசாமி, விக்ரமா, தனஞ்ஜெயா, காவேரி, கோபி, விஜயா, சைத்ரா, லட்சுமி, பார்த்தசாரதி, ஸ்ரீராமா, மகேந்திரா ஆகிய 14 யானைகள் ஆகும். இதில், அபிமன்யு, அர்ஜூனா உள்பட 9 யானைகள் முதல்கட்டமாக மைசூருவுக்கு கஜபயணமாக அழைத்து வரப்பட்டுள்ளன.

எடை அளவு பரிசோதனை

மைசூரு அரண்மனை வளாகத்தில் 9 யானைகளும் தங்க வைக்கப்பட்டுள்ளன. யானைகளின் பாகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தசரா யானைகளுக்கு சத்துள்ள உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று அபிமன்யு உள்பட 9 யானைகளின் எடை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி எடைமேடைக்கு அழைத்து சென்று அதில் அபிமன்யு உள்பட ஒவ்வொரு யானைகளையும் நிற்கவைத்து எடை பார்க்கப்பட்டது.

அர்ஜூனா 5,725 கிலோ

இதில் அதிகபட்சமாக அர்ஜூனா யானை 5,725 கிலோ எடை இருந்தது. தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு 4,770 கிலோ, மகேந்திரா 4,250 கிலோ, கோபாலசாமி 5,140 கிலோ, பீமா 3,920 கிலோ, தனஞ்ஜயா 4,810 கிலோ மற்றும் பெண் யானைகளான காவேரி 3,500 கிலோ, சைத்ரா 3,050 கிலோ, லட்சுமி 2,990 கிலோ எடை இருந்தன.

9 யானைகளின் எடை அளவையும் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் பதிவு செய்துகொண்டனர். இதையடுத்து நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) முதல் தசரா யானைகளுக்கு அரண்மனை வளாகத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் பன்னிமண்டபம் மைதானம் வரை காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி நடத்தப்படுகிறது. அதைதொடர்ந்து வரும் நாட்களில் பாரம் சுமக்கும் பயிற்சி, பீரங்கி வெடிகுண்டு சத்தம் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட உள்ளது. மேலும் 5 யானைகளும் விரைவில் அழைத்து வரப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com