ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் பிரியா ஆய்வு

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேயர் ஆர்.பிரியா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் பிரியா ஆய்வு
Published on

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எண்ணூர் விரைவு சாலை பட்டினத்தார் கோவில் குப்பம் அருகே கடந்த 2011-ம் ஆண்டு ரூ.1.25 கோடியில் சென்னை மாநகராட்சி சார்பில் நவீன மின்மயானம் கட்டப்பட்டது. எந்திரங்கள் பழுதடைந்ததால் கடந்த சில நாட்களாக இந்த மின்மயானம் செயல்படவில்லை.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நேற்று காலை இந்த நவீன மின்மயானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் மின் மயானத்தை சரிசெய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் அருகில் 25 வருடங்களுக்கு மேலாக சிதிலமடைந்து கிடக்கும் கல்லறைகளை அகற்றிவிட்டு, அவற்றை சீரமைக்கவும், மின்மயானம், இடுகாடு ஆகியவற்றை ஒரே வளாகத்தில் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்த மேயர், விரைவில் அதற்கான பணிகளை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது மேயரிடம் பட்டினத்தார் கோவில் தெருவில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மார்க்கெட்டை முறைப்படுத்திகெடுக்க வேண்டும் என்று 9-வது வார்டு கவுன்சிலர் உமா சரவணன் கோரிக்கை விடுத்தார். அதே போல், மணலி மண்டலம் 21-வது வார்டுக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் சித்த மருத்துவ பிரிவையும் பார்வையிட்ட மேயர் பிரியா, நோயாளிகளிடம் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.

அப்போது வடக்கு வட்டார துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மாதவரம் மண்டலம் புழல் நகர்ப்புற சமுதாய நல மையத்தை, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் பொது சுகாதார நிலைக்குழு தலைவர் டாக்டர் கோ.சாந்தகுமாரி உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com