மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
Published on

மேல்மலையனூர்,

அங்காளம்மன் கோவில்

மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாத அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உள்பிரகாரத்தில் உற்சவ அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து இரவு 11.30 மணிக்கு உற்சவ அம்மன் மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தார்.

ஊஞ்சல் உற்சவம்

பின்னர் அங்கிருந்த ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளினார். இதை தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடியவுடன், அம்மன் ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 12.30 மணிக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியுடன் ஊஞ்சல் தாலாட்டு நிறைவு பெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, திருவண்ணாமலை உதவி ஆணையர் கோகனசுந்தரம், தாசில்தார் மணிகண்டன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி சென்னை, காஞ்சீபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மயானக்கொள்ளை

வருகிற மாசி மாதம் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது. ஏனெனில் அன்று காலையில் மயானக்கொள்ளையும், இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறி கடந்த 25-ந் தேதி செஞ்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த தடையை அதே நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டதால் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com