இழிவுபடுத்தும் வகையில் மீம்ஸ் வெளியிடக்கூடாது - ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அவருடைய ரசிகர்களுக்கு இழிவுபடுத்தும் வகையில் மீம்ஸ் வெளியிடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இழிவுபடுத்தும் வகையில் மீம்ஸ் வெளியிடக்கூடாது - ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை
Published on

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் நெல்சன் இயக்கத்தில் தயாராகியிருக்கிறது. இந்தமாதம் 13-ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தரப்பிலிருந்து ரசிகர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை விஜய் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித்தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில், இணைய தளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.

இதுகுறித்து விஜய்யின் கடுமையான உத்தரவின் பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது, நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.

இருப்பினும், விஜய்யின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விஜய்யின் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் குடும்பத்தின் திருமண விழாவில் விஜய் கலந்து கொண்டார். அதே விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வந்திருந்தார். இருவரும் எதிரும் புதிருமாக யதார்த்த சூழலில் சந்தித்துக் கொண்டனர். சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் விடை பெற்றனர். இந்த சூழலில்தான் விஜய்யிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு அறிக்கை வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com