

சேலம்
சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள், குறைகளை நிவர்த்தி செய்ய ஆணையாளர் கிறிஸ்துராஜ் புதிய ஏற்பாடு செய்துள்ளார். அதாவது குறைகள் குறித்து தெரிவிக்க அலுவலர்களின் செல்போன் எண்கள் முக்கிய இடங்களில் எழுதப்பட்டுள்ளன.
மாநகராட்சி ஆணையாளர்
சேலம் மாநகராட்சியில் மண்டலங்கள், கோட்டங்கள் வாரியாக பணிபுரியும் அலுவலர்களின் செல்போன் எண்கள் 60 கோட்டங்களின் முக்கிய சாலைகளில் உள்ள சுவர்களில் எழுதப்பட்டு உள்ளது.
அதன்படி அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட தொங்கும் பூங்கா கட்டிட சுவரில் எழுதப்பட்டு உள்ள செல்போன் எண்களை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செல்போன் எண்கள்
அப்போது அவர் கூறியதாவது:-
குடிநீர் வினியோகம், சாலை பராமரிப்பு, சாக்கடை சுத்தம் செய்தல், கழிநீர் அகற்றுதல், தெரு விளக்கு பராமரிப்பு, சுகாதார வளாகங்கள் சுத்தம் செய்தல், மழைநீர் வெளியேற்றுதல், கொசு மருந்து தெளித்தல் போன்ற பணிகளில் ஏதாவது குறைகள் இருந்தால் அதனை தெரிவிக்க மாநகராட்சி அலுவலர்களின் செல்பேன் எண்களுக்கு தெரிவிக்கலாம்.
இதற்காக அலுவலர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்மூலம் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தகவல் வரப்பெற்று உடனுக்குடன் குறைகள் நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்த முறை மிகவும் பயன் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
நிவர்த்தி செய்து கொள்ளலாம்
எனவே அந்தந்த துறைகளின் அலுவலர்களை பொதுமக்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில், 60 கோட்டங்களிலும் முக்கிய சாலைகளில் உள்ள சுவர்களில் மாநகராட்சி அலுவலர்களின் பெயர், அவர்கள் பொறுப்பு, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்வதுடன், தங்களது குறைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.