

கிருஷ்ணகிரி:
இணையதள திருமண தகவல் மையம் மூலம் பெண்ணிடம் ஸ்காட்லாந்து டாக்டர் என பேசி பழகி நூதன முறையில் ரூ.27 லட்சத்து 66 ஆயிரத்தை அபேஸ் செய்த ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாட்ஸ் அப்பில் பழக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்ன எலசகிரியை சேர்ந்தவர் 37 வயது பெண். திருமணம் ஆகி விவகாரத்து பெற்றவர். இவர் மறுமணம் செய்வதற்காக பிரபல இணையதள திருமண தகவல் மையத்தில் தனது விவரங்களை பதிவு செய்தார்.
இந்த நிலையில் ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து மார்கஸ் பக்சி என்பவர் அந்த பெண்ணிடம் போனில் பேசினார். தான் ஸ்காட்லாந்து நாட்டில் கண் டாக்டராக இருப்பதாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து மார்கஸ் பக்சி அந்த பெண்ணிடம் வாட்ஸ் அப்பில் பேசி பழகி வந்துள்ளார்.
பணத்தை அனுப்பினார்
அப்போது மார்கஸ் பக்சி, 80 ஆயிரம் டாலரை நான் உங்களுக்கு ஒரு கிப்ட் பார்சலில் அனுப்பி வைத்துள்ளேன். அதை நீங்கள் பெற்று கொள்ளுங்கள். இதை பெற்று கொள்ள சுங்க இலாகா அதிகாரிகளை சரி கட்டி அந்த டாலரை பெற்று கொள்ளலாம் என்று கூறினார். மேலும் 7 வங்கி கணக்குகளை கூறி, அந்த கணக்குகளில் பணம் அனுப்புமாறு அந்த பெண்ணிற்கு கூறினார்.
இதை நம்பி அந்த பெண்ணும் 7 வங்கி கணக்குகளுக்கும் ரூ.27 லட்சத்து 66 ஆயிரத்து 500 அனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட மார்கஸ் பக்சி அந்த பெண்ணுடன் பேசுவதை தவிர்த்தார். மேலும் அவர் சொன்னபடி டாலர்களும் அந்த பெண்ணுக்கு வரவில்லை.
போலீசார் விசாரணை
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, மார்கஸ் பக்சி மற்றும் சிலர் மீது மோசடி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்ணிடம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.