

ஈரோடு
ஈரோடு, பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாததால் 4பேரிடம் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
வாகன சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேர்தல் பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ பார்வை குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த குழுவினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கிறார்களா? என்பது குறித்தும் இந்த குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஆவணம்
இந்த நிலையில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு திண்டல் மலை பகுதியில் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் அலுவலர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது காரில் ரூ.80 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் காரை ஓட்டி வந்தவரிடம் பணம் கொண்டு செல்ல உரிய ஆவணம் உள்ளதா? என்று கேட்டனர். ஆனால் அவரிடம் உரிய ஆவணம் இல்லை. இதனால் அவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் காரை ஓட்டி வந்தது ஈரோடு ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் சண்முகம் என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான சைபுதீனிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரூ. 1,18,300
இதேபோல் ஈரோடு சித்தோடு நால் ரோட்டில் கோழி வியாபாரி சதீஸ் என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.68 ஆயிரமும், முத்தம்பாளையம் அருகே அனுமன்பள்ளி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் சுரேஷ் என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.50 ஆயிரத்து 300-யும் பறக்கும் படை அதிகரிகள் நேற்று பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ. சைபுதீனிடம் ஒப்படைத்தனர்.
பெருந்துறை
பெருந்துறை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வேலுசாமி, முத்துசாமி ஆகியோர் நேற்று மாலை பெத்தாம்பாளையம் அருகே உள்ள கருக்கம்பாளையம் என்ற இடம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த பெருமாள் கவுண்டர் என்பவர் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பணம் தேர்தல் அலுவலர் இலாஹிஜானிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்து 300 மாவட்ட கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.