

அரியாங்குப்பம்
புதுச்சேரி அருகே கூடப்பாக்கம் புதுநகரை சேர்ந்த மணிகண்டன் மனைவி கஸ்தூரி (வயது 50). இவர் தனது மகன் மனோ என்பவருடன் நேற்று அரியாங்குப்பம் மணவெளி திருமால்நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கூடப்பாக்கம் கோல்டன் சிட்டியை சேர்ந்த ஒப்பந்தகாரர் அருணாச்சலம் (41), நாங்கள் செய்யும் வேலையை நீங்கள் எடுத்து செய்கிறீர்கள் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
அப்போது மண்வெட்டியால் கஸ்தூரியை அருணாச்சலம் தாக்கினார். இதை தடுக்க முயன்ற மனோவையும் அவர் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பதிலுக்கு மனோ அருணாச்சலத்தை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து கஸ்தூரி, அருணாச்சலம் ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.