சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தி நகராட்சி கூட்டத்தில் 8 கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலம் நகராட்சி கூட்டத்தில் 8 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தி நகராட்சி கூட்டத்தில் 8 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Published on

சத்தியமங்கலம்

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலம் நகராட்சி கூட்டத்தில் 8 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சத்தியமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆணையாளர் சரவணக்குமார், துணைத் தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் பொறியாளர் சிவக்குமார், சுகாதார அலுவலர் சக்திவேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். தீர்மானங்களை இளநிலை உதவியாளர் கவுரி வாசித்தார். சொத்து வரி உயர்வு பற்றி வாசிக்கப்பட்டது.

அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் லட்சுமணன் எழுந்து நின்று இந்த சொத்து வரி உயர்வை எங்களுக்கு உடன்பாடில்லை. இதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் என கூறிவிட்டு அவரும், அவருடன் சேர்ந்து 3 அ.தி.மு.க.வினர் என மொத்தம் 4 பேர் வெளிநடப்பு செய்தனர். மேலும் பா.ம.க. சார்பில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து 2 கவுன்சிலர்களும், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 2 கவுன்சிலர்களும் என 4 பேர் வெளிநடப்புச் செய்தார்கள். சிறிது நேரத்துக்கு பிறகு வெளிநடப்புச் செய்த 8 பேரும் மீண்டும் கூட்டத்தில் வந்து கலந்து கொண்டனர்.

ஊர் விளக்க அறிவிப்பு பலகை

பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-

தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி: மண்டல மதிப்பீடு சீராய்வு தொடர்பாக மக்களின் கருத்துக்களை பெற்று அரசிடம் இதுதொடர்பாக அனுமதி கோருவோம்.

பேபி (தி.மு.க.): எனது வார்டில் ஒரு வீதியில் குடிநீர் வருவதில்லை. ஆனால் வேறு ஒரு பகுதியில் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கிறது.

தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி: இதுபற்றி பொறியாளர் நேரில் வந்து ஆய்வு செய்து ஆவன செய்து கொடுப்பார்.

உமா(பா.ஜ.க.): சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டின் மையப்பகுதியில் வாகனங்கள் வந்து நின்று கொண்டு கோவை, ஈரோடு, பண்ணாரிக்கு எந்த வழியாகச் செல்வது என கேட்கிறார்கள். எனவே ஊர்களுக்கு செல்லும் விளக்க அறிவிப்பு பலகை வைத்து தர வேண்டும்.

தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி: செய்து தரப்படும்.

கடைகள் வாடகைக்கு?

லட்சுமணன் (அ.தி.மு.க.): நகராட்சி சார்பில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருவதை பல கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தி கடைகள் அனைத்தும் புதிதாக கட்டப்படும் என அறிவித்து இருந்தீர்கள். கட்டி முடிக்கப்பட்ட பிறகு தற்போது உள்ள அதே வியாபாரிகளுக்கு கடைகளை அதே வாடகைக்கு கொடுப்பீர்களா? மாற்றம் உண்டா?

பொறியாளர் சிவக்குமார்: எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. தற்போதுள்ள வியாபாரிகளுக்கு கடைகள் கட்டப்பட்டு ஒதுக்கப்படும்.அதே வாடகை வாங்கப்படும்.

எஸ்.ஆர். சாவித்திரி (தி.மு.க.): சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக சங்கு ஒலிக்கப்பட்டது. தற்போது ஏன் நிறுத்தப்பட்டு விட்டது?

ஆணையாளர் சரவணக்குமார்: சங்கு சத்தம் இடையூறாக இருப்பதால் பொதுவாக எல்லா நகராட்சிகளிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

உறுதி

லட்சுமணன் (அ.தி.மு.க.): கடைவீதியில் மையப்பகுதியில் உள்ள மணிக்கூண்டு மின் விளக்குகள் எதுவும் எரிவதில்லை. உடனடியாக அதை பழுது பார்த்து சரி செய்ய வேண்டும்.

ஆணையாளர் சரவணக்குமார்: ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது விரைவில் மின் விளக்குகள் எரியும்.

நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி: நாம் எல்லோரும் பதவி ஏற்று 40 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் 27 வார்டுகளில் உள்ள குடிநீர், மின்விளக்கு, சாலை வசதிகள் குறுகிய காலத்தில் செய்து முடிக்க இயலாது. ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் கேட்பது போல நிச்சயம் செய்து தரப்படும். தயவு செய்து யாரும் அவசரப்பட வேண்டாம். பொறுமையாக இருங்கள். பணிகள் தொடர்ந்து படிப்படியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இனியும் நடைபெறும்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com