2-வது வாரமாக முடங்கிய நாகை மாவட்டம்

முழு ஊரடங்கு காரணமாக காணும் பொங்கல் விழா களையிழந்தது. ஊரடங்கால் 2-வது வாரமாக நாகை மாவட்டம் முடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.
2-வது வாரமாக முடங்கிய நாகை மாவட்டம்
Published on

வெளிப்பாளையம்:

முழு ஊரடங்கு காரணமாக காணும் பொங்கல் விழா களையிழந்தது. ஊரடங்கால் 2-வது வாரமாக நாகை மாவட்டம் முடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15-ந் தேதி முதல் நாளை(செவ்வாய்க்கிழமை) வரை வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் காணும் பொங்கல் விழா களையிழந்தது. ஊரடங்கு காரணமாக நேற்று 2-வது வாரமாக நாகை மாவட்டத்தில் பால், மருந்தகம், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்து மூடப்பட்டு இருந்தன.

8,500 பஸ்கள் ஓடவில்லை

அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார், ஆட்டோ, லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் நாகையின் முக்கிய சாலைகளான நாகை-நாகூர் சாலை, நாகை பெரிய கடைதெரு, நீலா தெற்கு வீதி, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தன.

மாவட்டத்தில் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தேவையின்றி யாராவது சுற்றித்திரிகிறார்கள் என கண்காணிப்பதற்காக மாவட்ட எல்லையான கீழசன்னாநல்லூர், அருந்தவபுலம், செங்காதலை, கானூர் ஆகிய இடங்களிலும், மாநில எல்லையான வாஞ்சூர், மானாம்பேட்டை, சேசமூலை உள்ளிட்ட 8 இடங்களிலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன

நாகை மண்டலத்தில் உள்ள நாகை, திரூவாரூர், நன்னிலம், பொறையாறு, மயிலாடுதுறை, வேதாரண்யம் ஆகிய 11 பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் மீனவர்கள் பிடிக்க செல்லாததால் ஆயிரத்து 500 விசைப்படகு மற்றும் 2 ஆயிரத்து 500 பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில், நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், எட்டுக்குடி முருகன் கோவில், நாகை நீலாயதாட்சியம்மன் கோவில், வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருந்தன.

கடற்கரைகள் வெறிச்சோடின

நாகை மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை ஆகியவற்றில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டு இருந்ததால் காணும் பொங்கலையொட்டி எப்போதும் கூட்டம் அலைமோதும் கடற்கரையில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com