

புதுச்சேரி
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, மாணவர்களுடன் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறிது தூரம் ஓடினார்.
தேசிய ஒற்றுமை தினம்
இ்ந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாணவ, மாணவிகளின் ஒற்றுமை ஓட்டம் நேற்று நடந்தது.
கடற்கரை காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாணவர்களின் ஓட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக போலீசார், காவல்படை அல்லாதோர், மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை அவர் வாசிக்க, அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.
கவர்னர் ஓடினார்
முன்னதாக மாணவர்களின் ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுடன் கடற்கரை சாலையில் சிறிது தூரம் ஓடினார். மேலும் அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, கல்வித்துறை செயலாளர் ஜவகர், இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோரும் ஓடினார்கள்.இந்த ஓட்டத்தில் மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள். புதுவை நகரப் பகுதியை சுற்றி வந்த அவர்கள் மீண்டும் கடற்கரை காந்தி சிலை அருகே தங்களது ஓட்டத்தை முடித்துக்கொண்டனர்.