கோபி அருகே சொத்து தகராறில் தங்கையை பலூன் சுடும் துப்பாக்கியால் சுட்டவருக்கு வலைவீச்சு

கோபி அருகே சொத்து தகராறில் தங்கையை பலூன் சுடும் துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோபி அருகே சொத்து தகராறில் தங்கையை பலூன் சுடும் துப்பாக்கியால் சுட்டவருக்கு வலைவீச்சு
Published on

கடத்தூர்,

கோபி அருகே உள்ள தொட்டம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. அவருடைய மனைவி நதியா (வயது 28). கணேசமூர்த்தி கோபியில் உள்ள ஒரு தனியார் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நதியா அதே மில்லில் காசாளராக உள்ளார்.

நதியாவின் தந்தை சின்னசாமியின் வீடும் அதே பகுதியில் உள்ளது. நதியாவுக்கும், அவருடைய அண்ணன் பங்காருசாமிக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தீபாவளி அன்று கணவன் கணேசமூர்த்தியுடன் தந்தை வீட்டுக்கு நதியா சென்றார்.

அப்போது பங்காருசாமியும் அங்கு வந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே பங்காருசாமி தான் வைத்திருந்த பலூன் சுடும் துப்பாக்கியால் (ஏர்கன்) நதியாவை சுட்டார். இதில் அவருக்கு இடது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து பங்காருசாமி ஓடிவிட்டார். உடனே கணேசமூர்த்தியும், சின்னசாமியும் நதியாவை கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.

இதுபற்றி கோபி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பங்காருசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com