கூடங்குளம் அருகே, கேரள கழிவுகளை கொண்டுவந்த 2 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

கூடங்குளம் அருகே கேரள கழிவுகளை கொண்டுவந்த 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் அருகே, கேரள கழிவுகளை கொண்டுவந்த 2 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
Published on

கூடங்குளம்,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை கிராமத்தில் மீன் அரவை ஆலை மற்றும் எலும்பு அரவை ஆலை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு தேவையான கழிவு பொருட்கள் தூத்துக்குடி, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து லாரிகளில் இரவு நேரங்களில் வரும்.

அவ்வாறு கழிவுகளை லாரியில் ஆலைகளுக்கு கொண்டுவரும்போது சில கழிவுகள், ரத்தம் உள்ளிட்டவை லாரிகளில் இருந்து சாலை ஓரங்களில் மற்றும் காட்டுப்பகுதியில் விழுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் குறை கூறி வந்தனர். மேலும் இதுகுறித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த வழியாக கேரளாவில் இருந்து ஆலைக்கு கோழிக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் வந்தன. இதுகுறித்து அறிந்த இருக்கன்துறை, நக்கநேரி பொதுமக்கள் அந்த லாரிகளை சிறைபிடித்து முற்றுகையிட்டனர். உடனே ஒரு லாரியில் இருந்த டிரைவர் மற்றும் கிளீனர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஒரு லாரியின் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளத்தை சேர்ந்த செல்வம் (வயது 46), தேரைகால்புதூரை சேர்ந்த மூர்த்தி (33) ஆகியோரை பொதுமக்கள் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து நெல்லை சுகாதார துணை இயக்குனர் வரதராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வரதராஜன் தலைமையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, கழிவுகளின் தரம் அறிந்து லாரியின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் அந்த கழிவுகளை பறிமுதல் செய்யப்பட்டு, குழிதோண்டி புதைக்கப்பட்டது. பின்னர் போலீசார் பிடிபட்ட செல்வம், மூர்த்தி ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். லாரிகளையும் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரிகளின் உரிமையாளர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com