புதுப்பேட்டை அருகே, ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை - குடிநீர் வழங்கக்கோரி நடந்தது

புதுப்பேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
புதுப்பேட்டை அருகே, ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை - குடிநீர் வழங்கக்கோரி நடந்தது
Published on

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள கோட்லாம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 5, 7 ஆகிய வார்டு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. இது குறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா உலகநாதன், அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com