தாராவி மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெறும் தகுதியானவர்களை அடையாளம் காண புதிய கணக்கெடுப்பு; போராட்டத்தில் வலியுறுத்தல்

தாராவி மேம்பாட்டு திட்டத்தில் தகுதியான மக்களை அடையாளம் காண புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தாராவி மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெறும் தகுதியானவர்களை அடையாளம் காண புதிய கணக்கெடுப்பு; போராட்டத்தில் வலியுறுத்தல்
Published on

மும்பை, 

தாராவி மேம்பாட்டு திட்டத்தில் தகுதியான மக்களை அடையாளம் காண புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தாராவி மேம்பாட்டு திட்டம்

மும்பை நகரின் மையப்பகுதியில் குறிப்பாக பி.கே.சி. அருகே அமைந்துள்ளது தாராவி. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான இங்கு தமிழர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.தாராவி மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்கும் மேம்பாட்டு திட்டத்தை மாநில அரசு மேற்கொள்ள உள்ளது. இதற்கான ஒப்பந்த பணி அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தாராவியில் 259 ஹெக்டேர் பரப்பளவில் மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

திடீர் போராட்டம்

இந்த திட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. ஒரு பிரிவினர் நேற்று தாராவியில் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்கள் ராவ்பகதூர் சிவராஜ் மைதானத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். உள்ளூர் மக்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தாராவி 90 அடி சாலையில் நின்றவாறும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அதானி புகைப்படம் அடங்கிய பேனருடன் கோஷம் எழுப்பியப்படி எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தின் போது ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சந்தீப் கட்டகே கூறியதாவது:-

புதிய கணக்கெடுப்பு

தாராவி மேம்பாட்டு திட்டம் மிகப்பெரிய நில மோசடி. தகுதியின் அடிப்படையில் புதிய கணக்கெடுப்பை நாங்கள் விரும்புகிறோம். இன்று வரை உள்ள அனைத்து குடியிருப்புவாசிகளையும் தகுதியானவர்களாக கருதி அவர்களுக்கு 405 சதுர அடி வீடுகள் வழங்கப்பட வேண்டும். 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 59 ஆயிரம் பேர் வீடுகளை பெறும் தகுதியானவர்களாக கருதப்பட்டனர். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தாண்டும். எனவே புதிய கணக்கெடுப்பு நடத்தி தகுதியான அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். தாராவி மும்பை மாநகரில் பல்வேறு சிறுதொழில்களின் மையமாக விளங்குகிறது. அதன் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் உள்ளூர் வணிகங்களை சார்ந்து உள்ளனர். எனவே தாராவியை சிறப்பு பொருளாதார மண்டலமாக கருதப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சேபனை இல்லை

போராட்டத்தில் பங்கேற்ற பால் ரபேல் என்பவர் கூறுகையில், ''தாராவியில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதானி குழுமம் வாடகை, அடுக்குமாடி குடியிருப்புகள், போக்குவரத்து வசதி போன்ற எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றார். தாராவி மேம்பாட்டு திட்டம் ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டக்கூடியதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com