அமலாக்கத்துறை நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்

சொத்துக்களை முடக்கிய உத்தரவை மறுபரிசீலனை செய்யாவிட்டால் மேல் முறையீடு செய்வேன் என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
சென்னை,
'எந்திரன்' திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷங்கர் கூறியிருப்பதாவது:-
பதிப்புரிமை மீறல் நடக்கவில்லை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்த போதிலும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு ஆதாரங்கள், வாதங்கள் ஆரய்ந்து ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.குற்றச்சாட்டு தொடர்பாக உயர் நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. எந்திரன் படம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் எனது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
அசையா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக அமலாக்கத்துறையிடம் இருந்து தகவல் இல்லை. மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும். அதிகாரிகள் தங்களது நடவடிக்கையை மறு பரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன். அமலாக்கத்துறையின் தொடர் நடவடிக்கையால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்ட செயல் முறையின் அப்பட்டமான துஷ்பிரயோகத்தை குறிக்கிறது" என்றார்.
அமலாக்கத்துறை நடவடிக்கை ஏன்?
நடிகர் ரஜினிகாந்த்- ஐஸ்வர்யாராய் நடித்த 'எந்திரன்' திரைப்படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் உலக அளவில் திரையிடப்பட்டு ரூ.290 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது. அந்த சமயத்தில் 'எந்திரன்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் அவர், தான் எழுதிய ஜூகிபா கதை, 'திக்திக் தீபிகா' என்ற பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு நாவலாக வெளியானது.இந்த நாவல் கதையை திருடித்தான் ஷங்கர் 'எந்திரன்' படத்தை இயக்கி உள்ளார். எனவே காப்புரிமை சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. விசாரணையில் 'எந்திரன்' திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பணிகளுக்காக இயக்குனர் ஷங்கர் ரூ.11.50 கோடி சம்பளம் பெற்றிருப்பது தெரிய வந்தது. மேலும் அவர் இயக்கிய 'எந்திரன்' திரைப்படத்தையும், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய 'ஜூகிபா' (திக்திக் தீபிகா) நாவலையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது.அதில் 'எந்திரன்' திரைப்படம் ஜூகிபா நாவலை தழுவி எடுக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இயக்குனர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறி இருப்பதால் அவருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் இயக்குனர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2022-ம் ஆண்டு விசாரணை நடத்தி இருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.






