ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருவாரம் பேட்டரி நிற்கும்.. அறிமுகம் ஆகும் ஸ்மார்ட்போன்

image credits: Grok AI
செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கக்கூடிய பேட்டரிகளை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றன.
ஸ்மார்ட்போன்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத தொலைத்தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. வெறும் அழைப்புகளுக்கு மட்டும் இன்றி பொழுதுபோக்கு, ஆன்லைன் பரிவர்த்தனை என அனைத்திற்குமானதாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், உலகமே உள்ளங்கைக்குள் என்று சொல்வது கிட்டத்தட்ட நிஜமாகவே மாறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு உலகம் முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் ஊடுருவிவிட்டன. ஸ்மார்ட்போன்களில் வீடியோக்கள், இணைய வசதி என பொழுதுபோக்கிற்காகவும் அதிக நேரம் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இதில் பெரும் பிரச்சினையாக சார்ஜ்கள்தான். இதனால் தற்போது செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கக்கூடிய பேட்டரிகளை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி (Realme) 10001 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட செல்போனை வரும் ஜன. 29ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருவாரம் பேட்டரி நீடிக்கும்; 32 மணி நேரம் வரை தொடர்ந்து வீடியோ பார்க்கலாம் என்றும் ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ.25,000 – ரூ.30,000க்குள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






